10 ஆண்டுகளுக்கு முன் இந்திய சிறுவன் ஒருவனை சந்தித்த பிரான்ஸ் நாட்டவர்: இப்போது இருவரும் எப்படி இருக்கிறார்கள் தெரியுமா?
10 ஆண்டுகளுக்கு முன் பட்டப்படிப்பு படிப்பதற்காக பிரான்ஸ் நாட்டு இளைஞர் ஒருவர் இந்தியாவுக்கு வந்தபோது, ஏழைச்சிறுவன் ஒருவன் அவருக்கு நண்பனானான்.
அந்த நட்பு 10 ஆண்டுகளாகியும் தொடர்கிறது.
10 ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலிருந்து இந்தியாவுக்கு வந்தார் Hugo Ribadeau Dumas (22) என்ற பிரெஞ்சு இளைஞர்.
முதுகலைப் பட்டப்படிப்புகாக இந்தியா வந்த அவருக்கு, வட இந்திய கிராமங்களில் களப்பணியாற்ற வேண்டியிருந்தது.
களப்பணிக்காக அவர் இந்தி மொழி கற்றுக்கொள்ளவேண்டியிருந்தது. ஆனால், அவருக்கு இந்தி கற்றுக்கொடுக்க சரியான ஆள் கிடைக்கவில்லை.
Courtesy of Hugo Dumas
பாட்னா என்ற நகருக்கு வந்த Hugo, அங்கே ஒரு அறை எடுத்துத் தங்கியிருக்கிறார். அவரது அறை இருந்த தெரு முனையில் ஒரு தம்பதியர் துணிக்கு இஸ்திரி போடும் வேலை செய்துகொண்டிருந்திருக்கிறார்கள்.
ஏழ்மை நிலையில் இருந்த அவர்களுக்கு நான்கு பிள்ளைகள். அவர்கள் வேலைக்காக பாட்னாவுக்கு வந்திருந்ததால் ஒரு சிறிய அறையில் தங்கியிருந்திருக்கிறார்கள். ஆகவே, தூங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் பிள்ளைகள் அந்த இஸ்திரி போடும் வண்டியின் அருகிலேயேதான் விளையாடிக்கொண்டிருப்பார்களாம்.
தினமும் தன் அறைக்குத் திரும்பும்போது, தனக்குத் தெரிந்த இந்தியில் அந்த குடும்பத்தினருடன் உரையாடுவாராம் Hugo.
அப்போது, அந்த தம்பதியரின் பிள்ளைகளில் கடைக்குட்டியான Ritik Roushan என்ற சிறுவனுக்கும் Hugoவுக்கும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடித்துப்போக, அந்தச் சிறுவனுக்கு நட்பு என்பதன் பொருள் சரியாக புரிவதற்கு முன்பே இருவரும் நண்பர்களாகிவிட்டிருக்கிறார்கள்.
Courtesy of Hugo Dumas
இவர்கள் இருவரது நட்பையும் பார்த்தவர்கள், எப்படி ஒரு துணி துவைக்கும் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனும் ஒரு வெளிநாட்டவரும் நண்பர்களாக முடியும் என்று கூட கேட்டிருக்கிறார்கள். ஆனாலும், அனைத்தையும் தாண்டி நீடித்திருக்கிறது இருவருக்கிடையிலான நட்பு.
அந்த நட்பு தொடங்கி இப்போது பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது Hugoவின் நண்பர்களும் Ritikக்குக்கு நண்பர்களாகியிருக்கிறார்கள். Ritikஇன் நண்பர்கள் Hugoவுக்கு நண்பர்களாகியிருக்கிறார்கள்.
ஒரு சின்னஞ்சிறு சிறுவனாக அறிமுகமான Ritik, இப்போது டில்லியில் கல்லூரியில் படிக்கிறான். இடையிடையே அவ்வப்போது பிரான்ஸ் சென்று வந்த Hugo இந்தியில் பட்டப்படிப்பே முடிந்துவிட்டார்.
Courtesy of Hugo Dumas
இப்போது முனைவர் பட்டத்துக்காக படிக்கும் Hugo, இன்னும் சிறிது காலத்தில் படிப்பை முடித்து த தாய்நாட்டுக்குத் திரும்பவேண்டும். அவரைப் பிரிந்து நான் எப்படி இருப்பேன் என்று தெரியவில்லை என்கிறான் Ritik.
ஆனால், அவன் வளர்ந்துவிட்டான், எளிதாக மற்றவர்களிடம் நண்பனாகிவிடுகிறான். நான் இல்லையென்றாலும் சமாளித்துக்கொள்வான் என்கிறார் Hugo.
Hugo சென்றாலும், நான் அவருடன் தொடர்பிலிருந்துகொண்டுதான் இருப்பேன் என்று கூறும் Ritik, அவர் எங்கிருந்தாலும் எனக்கு அவர் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும் என்கிறான்.
நாடும், இனமும், மொழியும் தாண்டி, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது அந்த வித்தியாசமான நட்பு!