'இளமையிலே' கவிஞர் வைரமுத்து செய்த விளையாட்டு!
‘இராஜபார்வை’ திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்த ‘அந்திமழை பொழிகிறது’ பாடலைக் கேட்டிருப்பீர்கள்.
அதில் முதலாவது சரணத்தில் சில வரிகள் வரும்:
- தனிமையிலே வெறுமையிலே
- எத்தனை நாளடி இளமையிலே
- கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
- இமைகளும் சுமையடி இளமயிலே
இதிலே வருகின்ற இளமையிலே, இளமயிலே ஆகிய இரண்டு சொற்றொடர்களும் ஒலிப்பில் ஒரே விதமாகத்தான் இருக்கும்.
அதாவது ‘இளமையிலே’ என்று சொல்லிப் பார்த்தீர்கள் என்றால் அது இயல்பாகவே ‘இளமயிலே’ என்பது போலத்தான் ஒலிக்கும். 'மை' என்ற எழுத்து 'ம' போல ஒலிக்கும்.
‘மீசையை முறுக்கு’ என்று சொல்லும்போது அதில் வரும் ‘சை’, ‘யை’ ஆகிய எழுத்தொலிகளுக்கு யாரும் அழுத்தம் தருவதில்லை.
‘மீசய முறுக்கு’ என்பதுபோலத்தான் சொல்வதுண்டு. ஏன் இப்படி?
‘ஐ’ ஒலி இப்படிக் குறுகி ‘அ’ போல ஒலிப்பதைத் தமிழ் இலக்கணம் 'ஐகாரக் குறுக்கம்' என்று சொல்லும்.
‘ஐ’ என்பது ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஔ போல இரண்டு மாத்திரை அளவு காலம் ஒலிக்கும் நெடில் எழுத்து என்பதைப் பள்ளிக்காலத்தில் படித்திருப்போம்.
ஆனால் ஓர் எழுத்தாகத் தன்னைத் தானே குறிக்கும்போது மட்டுமே 'ஐ' இரண்டு மாத்திரை அளவு காலம் ஒலிக்கும்.
சொற்களில் அந்த எழுத்து வரும்போது தனக்கு விதிக்கப்பட்ட கால அளவை விடக் குறைந்தே ஒலிக்கும். இதனைத்தான் 'ஐகாரக் குறுக்கம்' என்று சொல்கிறோம்.
கவிதை இலக்கணத்தில் அசை, தளை முதலான செய்யுள் உறுப்புகளைச் சரிவரப் புரிந்து கொள்வதற்கு இந்த விதியை அறிந்திருப்பது முக்கியமானது.
ஐகாரக் குறுக்க விதியைப் பயன்படுத்தித்தான் ‘அந்திமழை பொழிகிறது’ பாடலில் ‘இளமையிலே, இளமயிலே’ என்று வார்த்தை விளையாட்டு நிகழ்த்தியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து.
மெட்டுக்குப் பாட்டு எழுதுவது எப்படி? என்ற கற்கை நெறியில் இணைந்து கொண்டு நீங்களும் இந்த நுட்பங்களைக் கற்றுக்கொள்ளலாம்! சொற்சுவை மிகுந்த பாடல்கள் எழுதலாம்!