பிரித்தானிய மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஜேர்மானியர்: கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட பரபரப்பு
ஏற்கனவே பிரித்தானிய மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளை காப்பாற்ற போராடிக்கொண்டிருந்த நேரத்தில், திடீரென வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்தால் எப்படி இருக்கும்? பிரித்தானிய மருத்துவமனை ஒன்றிற்கு அப்படி ஒரு மிரட்டல் வந்துள்ளது.
தனக்கு 10 மில்லியன் பவுண்டுகள் பிட்காயினாக கொடுக்கவேண்டும் என்றும், இல்லையென்றால் மருத்துவமனையை வெடிக்கச் செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார் மர்ம நபர் ஒருவர்.
கொரோனாவுடன் போராடிக்கொண்டிருந்த மருத்துவமனை அந்த மிரட்டலுக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே, அந்த நபர் தொடர்ந்து 17 அச்சுறுத்தும் மின்னஞ்சல்களை அந்த மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார்.
கண்டுபிடிக்க முடியாதவகையில் புத்திசாலித்தனமாக செயல்படுவதாக எண்ணி இரகசியமாக செயல்பட்ட நிலையிலும், பொலிசார் அந்த மர்ம நபரைக் கண்டுபிடித்துவிட்டனர்.
அந்த நபர் ஜேர்மனியைச் சேர்ந்த Emil A என்னும் நபர் என்பதைக் கண்டுபிடித்த பொலிசார், அவர் பெர்லினிலிருந்து அந்த மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியதைக் கண்டுபிடித்தனர். அவர் கணினி அறிவியல் கற்ற ஒருவர்.
நாஸி அமைப்பு ஒன்றின் பெயரில் அவர் மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியிருந்தார். ஒரே இரவில் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர் பொலிசார்.
அவருக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து, ஜேர்மனியில் அவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
