இங்கிலாந்துக்கு பயணிக்கும் பயணிகளுக்கு சாதகமான ஒரு செய்தி
இங்கிலாந்துக்கு வரும் பயணிகள், பயணம் புறப்படுவதற்கு முன் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்னும் கட்டுப்பாடு விலக்கிக்கொள்ளப்படலாம் என்னும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள பல கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரித்தானிய அமைச்சர்கள், பிளான் B மற்றும் இங்கிலாந்துக்கு வருவதற்கு முன் செய்யப்படவேண்டிய கொரோனா பரிசோதனை ஆகிய விடயங்கள் குறித்து இந்த வாரம் மீளாய்வு செய்ய இருக்கிறார்கள்.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு வருவதற்கு முன் செய்யப்படவேண்டிய கொரோனா பரிசோதனை தொடர்பான கட்டுப்பாடு விரைவில் விலக்கிக்கொள்ளப்பட இருப்பதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
The Times பத்திரிகைக்கு பேட்டியளித்த அந்த அதிகாரி, Omicron பரவலின் வேகத்தைக் குறைக்கும் முயற்சியாகவும், அது பிரித்தானியாவுக்குள் நுழைவதைத் தடுக்கும் நோக்கிலும் இந்த பயணத்துக்கு முந்தைய பரிசோதனைகள் அமுல்படுத்தப்பட்டன என்றும், ஆனாலும் Omicron வேகமாகத்தான் பரவுகிறது என்னும் நிலையில், ஆகவே, அந்த பரிசோதனைகளுக்கான அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில், தற்போதைய தரவுகளைப் பார்க்கும்போது, இங்கிலாந்தில் கொரோனா பரவல் இருந்தாலும், மேலதிக கட்டுப்பாடுகள் தேவைப்படாது என்பதையே தரவுகள் காட்டுவதாக அமைச்சர்களும் நேற்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.