பிரான்சில் அதிகரித்து வரும் ஒரு மோசடி: தவிர்ப்பது எப்படி?
பிரான்சில் காசோலை (செக்) மோசடிகள் அதிகரித்து வருகின்றன...
2020ஆம் ஆண்டில் சுமார் 538 மில்லியன் யூரோக்கள் அளவுக்கு பிரான்சில் காசோலை மோசடி நடைபெற்றுள்ளதாக பாதுகாப்பு ஏஜன்சி ஒன்றின் வருடாந்திர அறிக்கை தெரிவிக்கிறது.
காசோலை மோசடிகளைத் தவிர்ப்பது எப்படி?
பிரான்ஸ் மத்திய வங்கி இந்த மோசடிகளைத் தவிர்க்கும் வகையில் கண்காணிப்பை வலுப்படுத்துமாறு வங்கிகளை அறிவுறுத்தியுள்ளது.
கீழ்க்கண்ட விதங்களில் அவற்றைச் செய்யலாம் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது:
- தொலைந்த மற்றும் திருடப்பட்ட காசோலைகளுக்கெதிராக எடுக்கும் முயற்சிகளை மேம்படுத்துதல்.
- காசோலைப் புத்தகம் வழங்கப்படும்போது பாதுகாப்பை வலுப்படுத்துதல்.
- காசோலை வழங்கல் நடவடிக்கைகளை நிறுத்தும் முறையின் தரத்தை அதிகரித்தல்.
- காசோலைகளின் உண்மைத்தன்மையை சோதிப்பதற்கான கருவிகளை அதிக அளவில் பகிர்ந்துகொள்ளுதல்.
காசோலை பாதுகாப்பை தனிநபர்கள் அதிகரிப்பது எப்படி?
காசோலை மோசடிகளைத் தவிர்ப்பதற்கு வங்கிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், ஒருவருக்கு தபாலில் காசோலை அனுப்பும்போது, அவர்களுக்கு அது குறித்து முன் கூட்டியே தகவல் அளித்தல், காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை மீது மறு பக்கம் உள்ளவை தெளிவாகத் தெரியும் வகையிலான (transparent) பிளாஸ்டிக் டேப் ஒட்டுதல் முதலான சில ஆலோசனைகள் காசோலை கையாளும் தனிநபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
காசோலை தொலைவது அல்லது திருட்டுப் போவதைத் தவிர்ப்பது எப்படி?
அவசியமில்லாமல் யாரிடமும் காசோலைப் புத்தகங்களை கடன் கொடுக்கவேண்டாம், குடும்ப உறுப்பினர்களிடம் கூட.
காசோலைப் புத்தகங்களை பாதுகாப்பான இடத்தில் வையுங்கள்.
முன்கூட்டியே காசோலைகளில் கையெழுத்திடுதல், தொகை குறிப்பிடாமல் காசோலைகளை வைத்திருத்தல் போன்ற விடயங்களை தவிர்த்தல்.
வங்கி புதிய காசோலைப் புத்தகங்களை வழங்கும்போது, அவற்றைத் தபால் மூலம் பெறுவதற்கு பதிலாக நேரடியாக சென்று நீங்களே பெற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் காசோலை அல்லது காசோலைப் புத்தகம் காணாமல் போனால், உடனடியாக அந்த புத்தகத்திலுள்ள காசோலைகளுக்கு பணம் வழங்குவதை நிறுத்துமாறு வங்கிக்கு தகவல் கொடுங்கள்.
திருட்டு அல்லது மோசடி நடைபெறும் பட்சத்தில், பொலிசில் புகாரளியுங்கள்.
காசோலை ஒன்றை பாதுகாப்பான முறையில் பணமாக்குவது எப்படி?
காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சரியானவையா, முழுமையாக அவை நிரப்பப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
முடிந்தவரை உடனடியாக காசோலைகளை வங்கியில் டெபாஸிட் செய்யுங்கள்.
வேறு யாருக்காகவும் காசோலையோ பணமோ பெறாதீர்கள்.
காரணம், அது சட்ட விரோதமானதும், ஆபத்தானதும் கூட என்கிறது மத்திய வங்கி. காரணம், மோசடி காசோலைகள் மூன்று நாட்களில் நிராகரிக்கப்படும். தேவையில்லாமல் நீங்கள் மோசடி வழக்கில் கூட்டாளியாக கருதப்படும் நிலை உருவாகலாம் என்கிறது பிரான்ஸ் மத்திய வங்கி!