இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்ட வெடிகுண்டு... பீதியை ஏற்படுத்தும் வெடித்து சிதறும் காட்சிகள்
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட நாஸி யுக இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு ஒன்று வெடித்துச் சிதறும் காட்சிகள் வெளியாகி பீதியை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த வெளிக்கிழமையன்று, இங்கிலாந்தின் Exeter என்ற இடத்தில், பல்கலைக்கழகம் ஒன்று மற்றும் முதியோர் இல்லம் ஒன்று ஆகியவை அமைந்திருந்த ஒரு இடத்தின் அருகே, கட்டுமானப்பணிக்காக பணியாளர்கள் பள்ளம் தோண்டிக்கொண்டிருந்தனர்.
அப்போது, 8 அடி நீளமும், சுமார் 1,000 கிலோ எடையும் உடைய பிரம்மாண்ட வெடிகுண்டு ஒன்றை அவர்கள் கண்டு உடனடியாக பொலிசாருக்கு தகவலளித்தனர். உடனே பொலிசார் அந்த பகுதியில் இருந்த 2,600 கட்டிடங்களில் இருந்த ஆயிரக்கணக்கானோரை அவசர அவசரமாக வெளியேற்றினர்.
அந்த வெடிகுண்டு மிகப்பெரியது என்பதால், அதை எப்படி செயலிழக்கச் செய்வது என்பது குறித்து நிபுணர்கள் திட்டமிட வேண்டியிருந்தது.
ஆகவே, மறுநாள், அதாவது சனிக்கிழமை மாலை 6.10 மணிக்கு, கட்டுப்படுத்தப்பட்ட முறையில் அதை வெடிக்கச்செய்து செயலிழக்கச் செய்தனர் வெடிகுண்டு நிபுணர்கள். தற்போது, அந்த பிரம்மாண்ட வெடிகுண்டு வெடித்துச் சிதறும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அதைப் பார்க்கும்போது, அது வெடித்திருந்தால் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்ற பீதியை அந்த காட்சி ஏற்படுத்துவதை தவிர்க்க இயலவில்லை.
அந்த வெடி வெடிக்கும் சத்தம் ஆறு மைல் தொலைவுக்கு கேட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், அது வெடிக்கச் செய்யப்பட்ட நிலையிலும், பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
மேலும், வெடிகுண்டின் அபாயம் நீங்கிவிட்டதா என்பதை உடனடியாக முடிவு செய்ய இயலாததால், மக்கள் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்ப இயலாது என்றும், ஆகவே எங்கே தங்குவது என்பது குறித்து மாற்று ஏற்பாடு செய்துகொள்ளுமாறும் மக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.


