கனேடிய நகரம் ஒன்றில் வங்கியில் கொள்ளையடித்த நபர்: பிடிக்க உதவிய மோப்ப நாய்...
கனடாவின் வான்கூவரில் வங்கி ஒன்றில் கொள்ளையடித்த ஒருவர் கார் ஒன்றிற்குள் பதுங்கிக்கொண்டார்.
இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு பொலிஸ் நாய் உதவியுடன் பொலிசார் அவரைக் கைது செய்தார்கள்.
கனடாவின் வான்கூவரில் வங்கி ஒன்று கொள்ளையடிக்கப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று மாலை 5.30 மணியளவில் வங்கி ஊழியர் ஒருவர் பொலிசாரை அழைக்க, பொலிசார் வங்கிக்கு விரைந்தனர்.
ஆனால், பொலிசாரைக் கண்டதும் தப்ப முயன்ற குற்றவாளி ஒரு காரை நிறுத்தி அதில் ஏறி பதுங்கிக்கொண்டார். காரை தடுத்து நிறுத்திய பொலிசார் அந்தக் காரின் சாரதி மற்றும் பயணி ஒருவர் ஆகியோரை காரிலிருந்து இறங்கச் செய்தனர்.
ஆனால், காருக்குள் பதுங்கிக்கொண்ட குற்றவாளியோ இரண்டு மணி நேரம் வரை காரிலிருந்து வெளியே வரவில்லை.
கடைசியாக மோப்ப நாய் ஒன்றை வரவழைத்தனர் பொலிசார். நாயைக் கண்ட அந்த நபர் தப்பியோட முயல, டேஸர் மூலம் தாக்கி அவரைப் பிடித்துள்ளார்கள் பொலிசார்.
மாலை 7.30 மணியளவில் அந்த நபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு பரபரப்பு நிலவியது.