சுவிட்சர்லாந்துக்கு புதிதாக குடிபெயர்ந்தவர்களுக்கு உதவும் ஒரு செய்தி
*சுவிட்சர்லாந்து பல மொழிகள் பேசும் மக்கள் வாழும் ஒரு நாடாகும்.
*ஆனால், சுவிஸ் தேசிய மொழிகளில் ஆங்கிலம் ஒன்று அல்ல. என்றாலும், பல பணிகளுக்கு ஆங்கிலம் தேவையாக உள்ளது.
சுவிட்சர்லாந்துக்கு புதிதாக குடிபெயர்வோருக்கு சுவிஸ் மொழிகள் தெரிந்திராவிட்டாலும், அவர்களுக்கு ஆங்கில மொழிப்புலமை இருக்குமானால், அவர்களுக்கான வேலை வாய்ப்புகளும் சுவிட்சர்லாந்தில் இருக்கத்தான் செய்கின்றன.
ஆங்கில மொழிப்புலமை உள்ளவர்களுக்கு என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன?
முதல் வாய்ப்பு கல்வி கற்பித்தல். ஆனால், கல்வி கற்பிப்பதற்கு தகுதியான பட்டப்படிப்பும் தகுதிச் சான்றிதழும் வேண்டும். உங்கள் தாய்மொழியே ஆங்கிலமாக இருந்தாலும் கூட சான்றிதழ்கள் இல்லையானால், எந்தப் பள்ளியும் உங்களை கல்வி பயிற்றுவிக்க அழைக்காது.
இதுபோக, நீங்கள் தனிப்பட்ட முறையில் ஆங்கிலம் கற்பிக்கலாம். அதற்கு உங்களுக்கு ஆசிரியருக்கான பட்டப்படிப்பு தேவையில்லை.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை ஆங்கிலப்புலமை கொண்டவர்களுக்கேற்ற பிற தொழில்துறைகள் பல உள்ளன. அவை, ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் ஏஜன்சிகள் போன்ற சர்வதேச அமைப்புகள், அல்லது, பன்னாட்டு நிறுவனங்களின் தலைமையகங்கள்.
வேலை வாய்ப்புகள் குறித்து அறிந்துகொள்வது எப்படி?
நீங்கள் நேரடியாகவும் அலுவலகங்களை அணுகலாம். அல்லது, Adecco அல்லது Manpower போன்ற வேலை வாய்ப்பு ஏஜன்சிகளையும் அணுகலாம். அந்த ஏஜன்சிகள் மூலம் உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தாலும், அவர்கள் உங்களிடம் பணம் எதுவும் கேட்கமாட்டார்கள். காரணம், வேலை வழங்கும் நிறுவனங்கள் அவர்களுக்கான கட்டணத்தைச் செலுத்திவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.