கனடாவில் நிரந்தர வாழிட உரிமம் கோரி விண்ணப்பித்துவிட்டு காத்திருப்போருக்கு ஆறுதலளிக்கும் ஒரு செய்தி
கனடாவில் நிரந்தர வாழிட உரிமம் கோரி விண்ணப்பித்துவிட்டு காத்திருப்போருக்கு, ஆறுதலளிக்கும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
ஆம், புலம்பெயர்தல் விண்ணப்பங்கள் பரிசீலனை காலகட்டத்தைக் குறைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுப்பதற்காக, கனடா 85 மில்லியன் டொலர்களை பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா காலகட்டத்தால் ஏராளமான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாமல் கிடப்பில் இருந்துவிட்டன.
கனடாவில் குடியுரிமை கோரி விண்ணப்பித்தவர்கள், தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள், குடும்பத்தினர், மாணவ மாணவியர், அகதிகள் என கிட்டத்தட்ட 1.8 மில்லியன் பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதற்காக காத்திருக்கின்றன.
இந்நிலையில், மீண்டும் பரபரப்பாக முன்னிருந்ததுபோல் வேகமாக விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்காக, பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 85 மில்லியன் டொலர்களை கனடா அரசு பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்காக, கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தன்னை மாற்றங்களுக்கு உட்படுத்திக்கொண்டுள்ளது. விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்காக என்றே தனியாக 500 அலுவலர்கள், டிஜிட்டல் முறையாக்கப்பட்ட விண்ணப்பங்கள், உலகம் முழுவதிலும் உள்ள கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அலுவலகங்களின் உதவியை நாடுதல் என பல்வேறு நடவடிக்கைகளை துவங்கியுள்ளது கனடா.
பல நடைமுறைகள் ஒன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. நிரந்தர வாழிட உரிமம் கோரி விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கென தனியாக போர்ட்டல் ஒன்றையும் கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு உருவாக்கியுள்ளது. ஆட்களை முகத்துக்கு முகம் சந்திக்கத் தேவையின்றி இந்த போர்ட்டல் மூலமாகவே விண்ணப்பதாரர்கள் தங்கள் வாழிட உரிம அட்டைகளைப் பெற்றுக்கொள்ள இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.