மரணமடைந்த அன்பிற்குரியவர்களின் அஸ்தியைத் தூவுவதற்காக பிரெஞ்சு நிறுவனம் துவக்கியுள்ள நவீன முயற்சி
*மரணமடைந்த அன்பிற்குரியவர்களின் அஸ்தியைத் தூவும் பணியில் ட்ரோன்கள்.
*அஸ்தியைத் தூவும் காட்சியையும் உறவினர்கள் வீடியோவாகக் காண வசதி.
தங்கள் அன்பிற்குரியவர்கள் மரணமடையும்போது அவர்களுடைய அஸ்தியை புண்ணியத்தலங்களிலுள்ள நீர் நிலைகளில் கரைக்கும் வழக்கம் பல நாடுகளில் காணப்படுகிறது.
சில நாடுகளில், தாங்கள் மரணமடைந்தபின் தங்கள் அஸ்தியை தங்கள் தோட்டம் முதலான இடங்களில் தூவவேண்டும் என சிலர் விருப்பம் தெரிவிப்பதுண்டு.
வேறு சிலரோ, தங்கள் செல்லப்பிராணிகளின் அஸ்தி தங்களுக்குச் சொந்தமான நிலப்பரப்பில் தூவப்படவேண்டும் என விரும்புவதும் உண்டு.
தற்போது அப்படி தங்கள் அன்பிற்குரியவர்கள் அல்லது செல்லப்பிராணிகளின் அஸ்தியை அவர்கள் விரும்பும் இடத்தில் தூவுவதற்காக, Terra Ciela என்னும் பிரெஞ்சு நிறுவனம் ட்ரோன்களைப் பயன்படுத்தும் நவீன முயற்சியைத் துவக்கியுள்ளது.
Pic: Dmitry Kalinovsky / Shutterstock
அத்துடன், அப்படி அஸ்தி தூவப்படும் காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, அந்த நபரின் உறவினர்கள் கூடி ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து தங்கள் குடும்பத்தாருடன் இணைந்து அந்தக் காட்சிகளைக் காணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், எந்தெந்த இடங்களில் அஸ்தி தூவப்பட்டது என்பதை GPS உதவியால் அறிந்து, பின்னர் மரணமடைந்த நபரின் உறவினர்கள் அந்த இடங்களைச் சென்று காணவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
பிரான்சைப் பொருத்தவரை, சாலைகள் மற்றும் நீர்நிலைகள் தவிர்த்து பிற இயற்கைச் சூழல் கொண்ட இடங்களில் மரணித்தவரின் அஸ்தியைத் தூவ சட்டப்படி அனுமதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.