மனைவியின் விடுதலைக்காக 2,173 நாட்கள் தளராமல் போராடிய பிரித்தானியர்... மகளைக் கண்டு கதறிய தாய்: ஒரு நெகிழ்ச்சி சம்பவம்
அரசைக் கவிழ்க்க சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு ஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரித்தானிய ஈரானிய பெண் ஒருவர், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தன் கணவரையும் மகளையும் கண்ணீருடன் சந்தித்த நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியது.
பிரித்தானிய ஈரானிய இரட்டைக் குடியுரிமை கொண்டவரான Nazanin Zaghari-Ratcliffe, ஈரான் அரசைக் கவிழ்க்க சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு Evin என்னும் பயங்கர சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அவரை மீட்பதற்காக அவரது குடும்பத்தினரும், நண்பர்களும், சமூக ஆர்வலர்களும் விடாமல் போராடி வந்தார்கள். குறிப்பாக அவரது கணவரான Richard Ratcliffe, போராட்டங்களுடன், இரு முறை உண்ணாவிரதப்போராட்டத்திலும் ஈடுபட்டார்.
இந்நிலையில், நேற்று Nazaninஐ ஈரான் அரசு விடுவித்துள்ளது. (அதன் பின்னனியில் பல அரசியல் நடவடிக்கைகள் உள்ளன). அவருடன் மற்றொரு பிரித்தானிய ஈரானிய குடிமகனான Anoosheh Ashoori (67) என்பவரும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இருவருமாக ஈரானிலிருந்து விமானம் மூலம் ஓமான் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து பிரித்தானிய விமானப்படை விமானம் மூலம் நேற்று நள்ளிரவு 1.08 மணிக்கு பிரித்தானியா வந்தடைந்தார்கள்.
Anoosheh Ashooriயின் மகளான Elika எடுத்துள்ள வீடியோ ஒன்றில், குடும்பங்கள் ஒன்றிணையும் நெகிழ்ச்சிக் காட்சிகள் பதிவாகியுள்ளன.
Nazanin விமான நிலையத்துக்கு வந்ததும், அவரது ஏழு வயது மகளான Gabriella ஓடோடிச் சென்று, தாயைக் கட்டியணைத்துக்கொள்ள கண்ணீர் விட்டுக் கதறியுள்ளார் Nazanin. தாயும் மகளும் கண்ணீருடன் ஒருவரையொருவர் அணைத்துக்கொள்ளும் அந்தக் காட்சிகள் வீடியோவில் இடம்பெறவில்லையானாலும், அவர்கள் அழும் குரலை கேட்க முடிகிறது.
Nazanin விடுவிக்கப்பட்டதற்காக, அவரது கணவரான Richard, தாங்கள் மிகுந்த நன்றியுடையவர்களாக இருப்பதாக தெரிவித்துக் கொள்ள, தங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார் Nazanin.
இதற்கிடையில், விடுதலையான தன் அன்பு மனைவியிடம், உனக்கு என்ன வேண்டும் என Richard கேட்க, வீட்டுக்கு வந்ததும், எனக்கு ஒரு தேநீர் போட்டுத் தருவீர்களா என்றாராம் Nazanin!