பிரித்தானிய உளவாளி என்று கூறி பல இளம்பெண்களை ஏமாற்றிய நபர்: சிக்கியது எப்படி?
தன்னை ஒரு பிரித்தானிய உளவாளி என்று கூறி அறிமுகம் செய்துகொள்பவர் ராபர்ட்.
பொய் சொல்லி ஏமாற்றி பலரிடம் எக்கச்சக்கமான பணம் மோசடி செய்துள்ளார் அவர்.
தான் ஒரு பிரித்தானிய உளவாளி என்று கூறி இளம்பெண்கள் உட்பட பலரை ஏமாற்றி பெருமளவில் பண மோசடி செய்த ஒரு நபர் சிக்கினார்.
பிரித்தானியரான ராபர்ட் (Robert Hendy-Freegard, 51), மத்திய பிரான்சிலுள்ள Vidaillat என்ற கிராமத்தில் வாழ்ந்துவந்தார்.
கடந்த வாரத்தில் ஒருநாள், பொலிசார் அவரை விசாரிப்பதற்காக வந்துள்ளார்கள். பொலிசாரைக் கண்டதும், தனது காரில் ஏறிய ராபர்ட், இரண்டு பொலிஸ் காவலர்களை இடித்துத் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பியிருக்கிறார்.
அந்த பொலிசாரில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
Picture: Netflix
பிரெஞ்சு பொலிசார் ஐரோப்பா முழுமைக்குமான கைது வாரண்ட் பிறப்பித்து ராபர்ட்டை தேடி வந்துள்ளார்கள்.
இந்நிலையில், அவரது கார் நம்பர் பிளேட் மூலம் பெல்ஜியம் நாட்டிலுள்ள Groot-Bijgaarden என்ற இடத்தில் ராபர்ட்டை கைது செய்துள்ளார்கள்.
வரும் சனிக்கிழமை அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருக்கிறார்.
கைது செய்யப்பட்டுள்ள இந்த ராபர்ட் சாதாரண ஆள் இல்லை. வெவ்வேறு பெயர்களில் தன்னை ஒரு பிரித்தானிய உளவாளி என்று கூறி இளம்பெண்கள் உட்பட பலரிடம் தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் ராபர்ட், அவர்களை தீவிரவாதிகள் குறி வைத்திருப்பதாகக் கூறி, தான் அவர்களைக் காப்பாற்றுவதற்காக வந்திருப்பதாக நம்பவைப்பார்.
இளம்பெண்களை அவர்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்திடம் இருந்து பிரித்து, அவர்களுடன் எங்கேயாவது தலைமறைவாகிவிடுவார். அவர்களுடைய பணத்தில் ஆடம்பரக் கார், வெளிநாட்டுச் சுற்றுலா என வாழ்க்கையை என்ஜாய் செய்துள்ளார் அவர்.
அப்படி அவர் ஏமாற்றிய ஒரு பெண் மரியா (Maria Hendy). இந்த மரியா, ஜான் (John Atkinson) மற்றும் சாரா (Sarah Smith) என்னும் தனது நண்பர்களை ராபர்ட்டுக்கு அறிமுகம் செய்ய, அவர்களையே மரியாவிடமிருந்து பிரித்த ராபர்ட் அவர்களையும் ஏமாற்றி 1,000,000 பவுண்டுகள் வரை மோசடி செய்திருக்கிறார்.
Picture: Netflix
அதேபோல சாண்ட்ரா (Sandra Clifton) என்ற பெண்ணை பொய் சொல்லி ஏமாற்றிய ராபர்ட், அவரை அவரது பிள்ளைகளிடமிருந்து பிரித்து எங்கோ அழைத்துச் சென்றிருக்கிறார். அதன் பின் எப்போதாவது தன் பிள்ளைகளைத் தொடர்பு கொண்டாலும் தான் எங்கே இருக்கிறேன் என்பதை சொல்லவேயில்லையாம் சாண்ட்ரா.
2002ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, 2005இல் ஆயுள் தண்டனை பெற்று சிறை சென்ற ராபர்ட், மேல் முறையீடு செய்து 2009இல் சிறையிலிருந்து விடுதலை பெற்றுவிட்டார். அவரது கதை இந்த ஆண்டு நெட்ஃப்ளிக்சில் வெளியான நிலையில், அவர் பிரான்சில் வாழ்ந்துவருவதாக கூறப்பட்டது.
தற்போது பெல்ஜியம் பொலிசாரிடம் சிக்கியிருக்கிறார் பிரித்தானிய மோசடியாளரான ராபர்ட்!
Picture: Netflix