சுவிஸில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர் திடீர் மரணம்: நேரடி தொடர்பு இல்லை என மறுப்பு
சுவிட்சர்லாந்தில் முதியோர் காப்பகம் ஒன்றில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட முதியவர் சில மணி நேரங்களில் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த முதியவர் மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் நேரடி தொடர்பு இல்லை என சுவிஸ் சுகாதாரத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து அரசாங்கம் அமெரிக்காவின் பைசர் நிறுவன கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்து, 3 மில்லியன் டோஸ்களுக்கு ஒப்பந்தமும் மேற்கொண்டுள்ளது.
இதனையடுத்து எதிர்வரும் மாதம் முதல் பைசர் நிறுவனம் மாதம் 250,000 டோஸ்களை சுவிட்சர்லாந்துக்கு வழங்க முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் ஜனவரி 4 முதல் சுவிட்சர்லாந்து முழுவதும் தேவைப்படுபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன் முன்னோடியாக லூசர்ன் மண்டலத்தில் முதியோர் காப்பகங்களில் முதற்கட்டமாக பைசர் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
அதில் ஒரு முதியவர் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட சில மணி நேரங்களில் மரணமடைந்துள்ள சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள் அந்த முதியவருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் 26 ஆம் திகதி அந்த முதியவர் சிறுநீர்க்குழாய் வலி மற்றும் அடிவயிற்றில் வலி இருப்பதாக புகார் கூறியுள்ளார்.
பின்னர் அவருக்கு இரத்த அழுத்தம் குறைந்ததுடன் அவரது நாடித் துடிப்பு அதிகரித்துள்ளது.
இதனிடையே அந்த முதியவருக்கு விரிவான சோதனை முன்னெடுக்க மருத்துவர்கள் தயாரான நிலையில், செவ்வாயன்று அவர் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மறதி நோயால் அவதிப்பட்டு வந்த அந்த முதியவர் வேறு நோய் பாதிப்புகள் ஏதும் இன்றி ஆரோக்கியமாகவே இருந்துள்ளார்.
ஆனால் சுவிஸ் சுகாதாரத்துறை மற்றும் மண்டல மருத்துவத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கொரோனா தடுப்பூசிக்கும் அந்த முதியவர் மரணத்திற்கும் நேரடி தொடர்பு இல்லை என்றே தெரிய வந்துள்ளது.
91 வயதான அந்த முதியவர் ஏற்கனவே மருத்துவ சிகிச்சையில் பலமுறை இருந்து வந்துள்ளார்.
அவருக்கு இயற்கையான மரணம் ஏற்பட்டதாகவே மருத்துவ வட்டாரங்கள் தற்போது தகவல் வெளியிட்டுள்ளனர்.