8,000 மைல்கள் கடந்த ஒரு புறா... பாராட்டுக்குப்பதில் மரண தண்டனை: சோகப் பின்னணி
ஒரு பந்தயப்புறா, பயங்கரமான 8,000 மைல் தூர பயணத்தை கஷ்டப்பட்டுக் கடந்தது. ஆனால், பாரட்டப்படுவதற்கு பதிலாக, அந்த புறா கொல்லப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Joe என்று பெயரிடப்பட்ட அந்த பந்தயப்புறா, சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் திகதி அமெரிக்காவின் Oregon என்ற இடத்திலிருந்து புறப்பட்ட நிலையில் மாயமானது.
இந்நிலையில், டிசம்பர் 26ஆம் திகதி, அந்த புறா அவுஸ்திரேலியாவின் Melbourneஇலுள்ள ஒரு தோட்டத்தில் சோர்வாக அமர்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது, பசிபிக் மகாசமுத்திரத்தை சரக்குக் கப்பல் ஒன்றின் மீது அமர்ந்து கடந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
அந்த புறாவை அவுஸ்திரேலியாவில் கண்டுபிடித்த Kevin Celli-Bird என்பவர், அதற்கு உணவளித்து மீண்டும் அதை நல்ல நிலைமைக்கு கொண்டுவந்துள்ளார்.
இந்த செய்தி உள்ளூர் ஊடகங்களில் கவனம் ஈர்த்தது. ஆனால், அதிர்ச்சியளிக்கும் விதமாக அந்த புறாவை மீண்டும் பிடித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு அதிகாரிகள் Kevinக்கு உத்தரவிட்டனர்.
அது அமெரிக்காவிலிருந்து வந்துள்ளதால், ஒருவேளை கொரோனாவைக் கொண்டுவந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகப்படுவதால், அதைப் பிடித்துக் கொல்ல அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஆனால், அந்த புறா மீண்டும் தன் சக்தியைப் பெற்றுக்கொண்டுள்ளது, அது பறந்தும் போய்விட்டது, ஆகவே அந்த புறாவை தன்னால் இனி பிடிக்க முடியாது என்று கூறிவிட்டார் Kevin.
எனவே, அவுஸ்திரேலிய வனத்துறை அதிகாரிகள் அந்த புறாவைத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.