சொர்க்கத்தில் சிறைவைக்கப்பட்டுள்ள இளவரசி: மர்மமாக மாயமான துபாய் இளவரசியின் சோகக் கதை!
வெளிநாடுகளிலிருந்து செல்லும் இன்ஸ்டாகிராம் பிரபலங்களுக்கு துபாய் ஒரு சொர்க்கம்... உள்ளூர் பெண்கள், தலை முதல் பாதம் வரை உடலை மறைத்துக்கொண்டிருக்கும் அதே நாட்டில், வெறும் உள்ளாடைகளுடன் போஸ் கொடுத்துக்கொண்டிருப்பார்கள் வெளிநாட்டுப் பெண்கள்...
நாட்டின் மன்னர் சுற்றுலாப்பயணிகளை இரு கரம் நீட்டி வரவேற்பார்... ஆனால், அதே மன்னரின் மனைவியும் பிள்ளைகளும் அவர் உத்தரவில்லாமல் நாவை அசைக்கக்கூட முடியாது!
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மன்னரின் மனைவிகளில் ஒருவரான இளவரசி ஹயா (45), தனது மெய்க்காவலருடன் உறவு வைத்துக்கொண்டு, நாட்டிலிருந்தே தப்பி பிள்ளைகள் இருவருடன் பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்துவிட்டார்.
மன்னரின் ஆறு மனைவிகளுக்கு 30 பிள்ளைகள்... அவர்களில் ஒருவர் Latifa al-Maktoum (35). அவரும் எப்படியாவது தந்தையின் பிடியிலிருந்து தப்பி நாட்டை விட்டு வெளியேறிவிட திட்டமிட்டார்.
அதன்படி, 2018ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், ஒரு நாள், Latifaவின் உடற்பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்த Tiina Jauhiainen என்னும் பெண், பிரான்ஸ் நாட்டவரும் நண்பருமான ஒரு முன்னாள் உளவாளி என சிலரது உதவியுடன் அரண்மனையிலிருந்து தப்புகிறார் Latifa.
எட்டு நாட்களுக்குப் பின், இந்தியப் பெருங்கடலில், படகு ஒன்றில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது, ஒரு வழியாக விடுதலை பெற்றுவிட்டேன் என Latifa நிம்மதிப் பெருமூச்சு விடும் நேரம், எதிர்பாராத ஒரு பயங்கரம் நிகழ்கிறது.
படகுகளில் வந்த அமீரக பொலிசார் Latifa இருந்த படகை சூழ்ந்துகொள்கிறார்கள். கதறக் கதற முரட்டுத்தனமாக கையாளப்படும் இளவரசிக்கு மயக்க ஊசி செலுத்தப்படுகிறது.
கண் விழிக்கும்போது, துபாயில் ஒரு அறையில் இருக்கிறார் அவர். அங்கிருக்கும் ஒரு காவலாளி Latifaவிடம், நீ இனி சூரியனைப் பார்க்கவே முடியாது என்கிறார்!
இதற்கிடையில் Latifaவுடன் கைது செய்யப்பட்ட பின்லாந்து நாட்டவரான Tiina இரண்டு வாரங்களுக்குப் பின் விடுவிக்கப்படுகிறார்.
விடுவிக்கப்பட்டதும், அவர் இளவரசி Latifaவின் கதையை வெளி உலகுக்கு சொல்கிறார். ஐக்கிய நாடுகள் துபாய் மன்னரை நெருக்குகின்றன. என்ன நடக்கிறது, Latifa உயிருடன் இருக்கிறாரா என தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட, Latifaவை சந்திக்க, ஐக்கிய நாடுகளின் முன்னாள் உயர் ஆணையரான Mary Robinson வருகிறார்.
ஆனால், Mary Robinsonஇடம் Latifaவுக்கு மன நல பிரச்சினை என்றும், Latifaவிடம் நண்பர் ஒருவர் உன்னைப் பார்க்க வருகிறார், நீ சாதாரணமாக இருப்பதுபோல் நடித்தால் சில நாட்களில் துபாயிலிருந்து வெளியேறிவிடலாம் என்றும் பொய் சொல்லி இருவரையும் சந்திக்கவைக்கிறார்கள்.
Latifa மகிழ்ச்சியாக இருப்பது போன்ற புகைப்படங்களை Mary Robinson வெளியிடுகிறார்.
உலகத்தின் வாயை அடைத்தாயிற்று! ஆனால், தோழியிடமிருந்து பதில் ஏதும் வராததால் தவித்துப்போகிறார் Tiina.
அப்படியிருக்கும்போது, 2019ஆம் ஆண்டு Latifaவிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது Tiinaவுக்கு... தான் ஒரு வீட்டில் அடைக்கப்பட்டிருப்பது முதல் தனக்கு என்னென்ன நடந்தது என பல விடயங்களை ஒரு குளியலறையில் மறைந்திருந்துகொண்டு தெரிவிக்கிறார் Latifa.
பின்னர் ஒருநாள் மீண்டும் Latifaவிடமிருந்து வரும் அழைப்புகள் நின்றுபோகிறது, ஒருவேளை அவர் மொபைல் பயன்படுத்தும்போது பிடிபட்டு, அவரது மொபைல் பறிக்கப்பட்டிருக்கலாம்! தற்போது, அவர் வெளியிட்ட வீடியோக்களை ஒவ்வொன்றாக உலகின் பார்வைக்கு வைக்கிறார் Tiina.
அப்படியாவது சொர்க்கத்தில் சிறைவைக்கப்பட்டுள்ள அந்த இளவரசிக்கு ஒரு விடுதலை கிடைக்காதா என காத்திருக்கிறார் அவர்..


