Loan Amount ரூ.770 -க்காக.. கூலித்தொழிலாளியின் மனைவியை அழைத்துச் சென்ற தனியார் வங்கி ஊழியர்!
ரூ.770 கடன் தவணையை கணவர் செலுத்தாததால், தனியார் வங்கி ஊழியர்களால் மனைவி சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.770 கடன் தவணை
தமிழக மாவட்டமான சேலம், வாழப்பாடி அருகே உள்ள துக்கியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் ஒரு கூலித்தொழிலாளி.
இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தனியார் வங்கி மூலம் ரூ.35 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். இந்த கடனுக்கு வாரம் தோறும் ரூ.770 வீதம் 52 வாரங்களுக்கு தவணை தொகையை செலுத்த வேண்டும்.
ஆனால், பிரசாந்தால் கடந்த 2 வாரங்களாக தவணை தொகையை செலுத்த முடியவில்லை.
இன்னும் பிரசாந்த்திற்கு 10 தவணைகள் இருந்த நிலையில், பணம் செலுத்தாதது தொடர்பாக வங்கியின் ஊழியர் சுபா என்பவர் நேற்று பிரசாந்த்தை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், பிரசாந்த் வேலையில் இருந்ததால் அழைப்பை ஏற்க முடியவில்லை.
மனைவியை அழைத்துச் சென்ற தனியார் வங்கி
இதனால் துக்கியம்பாளையம் பகுதியில் உள்ள பிரசாந்த்தின் வீட்டிற்கு சுபா உள்பட வங்கி ஊழியர்கள் சென்று, அவரது மனைவி கவுரி சங்கரியிடம் கடனை பற்றி கேட்டுள்ளனர்.
அப்போது அவர் கணவர் வேலைக்கு சென்று விட்டதாகவும், அவர் வந்தவுடன் இதனை பற்றி தெரிவிக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
ஆனால், அதனை ஏற்க மறுத்த வங்கி ஊழியர்கள் கவுரி சங்கரியை வங்கிக்கு வருமாறும், தவணை தொகையை செலுத்திய பின்னர், உங்கள் கணவர் அழைத்துச் செல்லட்டும் என்றும் கூறியுள்ளனர். பின்னர், வங்கிக்கும் அவரை அழைத்துச் சென்றுள்ளார்.
இதனையறிந்த பிரசாந்த் அதிர்ச்சியடைந்து தவணை தொகையை செலுத்திவிட்டு மனைவியை மீட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |