பிரித்தானியா தரப்பிலிருந்து நம்பிக்கையளிக்கும் ஒரு செய்தி: 50 சதவிகிதம் குறைந்த மருத்துவமனை அனுமதிகள்
தொடர்ந்து தென்னாப்பிரிக்கா தரப்பிலிருந்து Omicron வகை மரபணு மாற்ற வைரஸ் தொடர்பில் நேர்மறையான செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், முதன்முறையாக பிரித்தானியா தரப்பிலிருந்தும் ஒரு நம்பிக்கையூட்டும் செய்தி வெளியாகியுள்ளது.
அது என்னவென்றால், கடந்த ஆண்டில் இங்கிலாந்தில் இதே காலகட்டத்தில் கொரோனாவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட, Omicron வகை கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலிலும், இந்த ஆண்டு கொரோனாவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 50 சதவிகிதத்திற்கும் அதிகம் குறைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், தென்னாப்பிரிக்க மருத்துவர்கள் தொடர்ந்து கூறிவந்ததுபோல், Omicron வகை கொரோனா வைரஸ் தீவிரம் குறைந்ததுதான் என்ற ஒரு நம்பிக்கை பிரித்தானியாவிலும் உருவாகத் தொடங்கியுள்ளது.
அதற்கு ஆதாரமான இன்னொரு நல்ல அறிகுறி என்னவென்றால், கடந்த ஆண்டு குளிர்காலத்தின்போது கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கை 19,277. ஆனால், இந்த ஆண்டு தற்போது, அதுவும் நேற்றைய நிலவரத்தின்படி, கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கை 8,474 மட்டுமே!
ஒரு பக்கம் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையைப் பார்த்தால் மார்ச் 5ஆம் திகதியை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை 1,000 அதிகம்தான். ஆனாலும், கடந்த குளிர்காலத்தின்போது நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் தேவைக்காக ஓடிக்கொண்டிருந்த ஒரு நிலை இப்போது இல்லை, அதாவது தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் பொருத்தப்படவேண்டிய அளவுக்கு அவர்களது நிலைமை மோசமாக இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.
தற்போது கொரோனா காரணமாக மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 842. ஆனால், கடந்த இரண்டு மாதங்களைப் பொருத்தவரை, இதுதான் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கையிலேயே குறைவான எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.