ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியை இடைமறித்த பொலிஸார்..காரணம் இதுதான்
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை பொலிஸார் நிறுத்த சொன்னதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
புனே இசை நிகழ்ச்சி
கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி புனேவின் ராஜ்பகதூர் மில்ஸ் எனும் இடத்தில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் பங்கேற்றிருந்தனர். இரவு 7.30 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சி 10.05 மணியை எட்டியபோது, தில் சே படத்தில் இடம்பெற்ற சையா சையா பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடிக் கொண்டிருந்தபோது மேடை ஏறிய பொலிஸார் ஒருவர் நிகழ்ச்சியை நிறுத்தும்படி சுட்டிக் காட்டினார்.
அவர் தனது கடிகாரத்தில் 10 மணியைக் கடந்து விட்டதாகக் கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனினும் ஏ.ஆர்.ரஹ்மான் பார்வையாளர்களுக்கு நன்றி கூறி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.
Did we all just have the “Rockstar” moment on stage yesterday? I think we did!
— A.R.Rahman (@arrahman) May 1, 2023
We were overwhelmed by the love of the audience and kept wanting to give more..
Pune, thank you once again for such a memorable evening. Here’s a little snippet of our roller coaster ride ;) pic.twitter.com/qzC1TervKs
ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு
இதனை ஏ.ஆர்.ரஹ்மான் 'ராக் ஸ்டார் தருணம்' என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அத்துடன், விரைவில் மீண்டும் இணைந்து பாடுவோம் என புனே ரசிகர்களுக்கு கூறினார்.
ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில் நடந்த இந்த சம்பவம் ஏ.ஆர்.ரஹ்மானை அவமானப்படுத்தும் விதமாக இருந்துள்ளது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Pune! Thank you for all the love and euphoria last night! Was such a roller coaster concert! No wonder Pune is home to so much classical music!
— A.R.Rahman (@arrahman) May 1, 2023
We shall be back soon to sing with you all again!
#2BHKDinerKeyClub @heramb_shelke @btosproductions EPI pic.twitter.com/UkBn09FwLj
காரணம் கூறிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்
இந்த நிலையில் நிகழ்ச்சியை பொலிஸார் நிறுத்தக் கூறியதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. வழக்கமாக ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும்போது காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, பொதுப்பணித்துறை ஆகியவற்றிடம் இருந்து முறையான அனுமதி பெற வேண்டும்.
அப்போது பொலிஸார் அந்தந்த இடத்தின் விதிகளுக்கு ஏற்ப நேரக் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிப்பர். அதன்படி, ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி இரவு 7 மணி முதல் 10 மணிவரை நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
அதில் கடைசி பாடலாக 'வந்தே மாதரம்' இடம்பெறும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், 10 மணி ஆனபோது சையா சையா பாடலுடன் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டது. நேரம் 10 மணியை கடந்ததால் காவல்துறையினர் மேடையில் ஏறி நிறுத்த வலியுறுத்தியுள்ளனர். அதன்படியே தாங்களும் உடனடியாக நிகழ்ச்சியை நிறுத்திவிட்டதாக ஏற்பாட்டளார்கள் கூறியுள்ளனர்.
அத்துடன், மேடையில் ஏறாமல் பின்புறம் வந்து எங்களிடம் காவல்துறை இதை தெரிவித்திருந்தால் எங்கள் தரப்பு விளக்கத்தை கூறி முடித்திருப்போம் எனவும் கூறியுள்ளனர்.
பொலிஸார் கூறும் காரணம்
அதேபோல், புனே மண்டலம்-2 காவல்துறை இணை கண்காணிப்பாளர் ஸ்மர்டனா பாட்டீல் கூறுகையில், 'ஏ.ஆர்.ரஹ்மான் தனது கடைசிப் பாடலைப் பாடிக்கொண்டிருந்தார். ஆனால், இரவு 10 மணியைத் தாண்டிவிட்டது என்பது அவருக்கு தெரியவில்லை. அதனால் விழா அரங்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் அதை அவரிடம் தெரிவித்தனர். இது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என்பதால் அவரும் பாடலை நிறுத்தி, நிகழ்ச்சியையும் முடித்துக் கொண்டார்' என தெரிவித்துள்ளார்.
A.R.Rahman Twitter