கனேடிய புகைப்படக்கலைஞருக்கு கிடைத்த ஒரு அபூர்வ காட்சி... பின்னணியில் இருக்கும் மிக அபூர்வ செய்தி
கனேடிய புகைப்படக்கலைஞர் ஒருவர், விக்டோரியாவிலுள்ள இயற்கை சரணாலயம் ஒன்றிற்கு சென்றிருக்கிறார். அப்போது, எராளமான காகங்கள் அவரருகே வந்து அமர்ந்துள்ளன.
அவற்றில் ஒரு காகத்துக்கு உடல் நலமில்லாதது போல் தோன்றவே, அதை புகைப்படம் எடுத்துள்ளார், ஆஸ்டின் என்ற அந்த புகைப்படக்கலைஞர். ஆனால், வீட்டில் வந்து அந்த புகைப்படங்களை பெரிதாக்கிப் பார்க்கும்போது, ஆஸ்டின் கண்களில் அந்த அபூர்வக் காட்சி சிக்கியுள்ளது. உண்மையில், உடல் நலமில்லாததுபோல காணப்பட்ட காகத்தின் உடல் முழுவதும் எறும்புகள் ஊர்வதை புகைப்படத்தில் கவனித்துள்ளார் அவர்.
உடனே, இது என்ன விடயம் என அறிந்துகொள்வதற்காக அந்த புகைப்படத்தை சமூக ஊடகத்தில் வெளியிட்டு கருத்து கேட்டுள்ளார் அவர். அப்போதுதான் ஒரு அரிய உண்மை தெரியவந்துள்ளது. அந்த காகம் ஒரு எறும்புப் புற்றின் மீது சென்று அமர்ந்துள்ளது.
தெரியாமல் அல்ல, வேண்டுமென்றே... இந்த நிகழ்வை Anting என்று அழைக்கிறார்கள். அதாவது, சில சந்தர்ப்பங்களில் காகங்கள் இப்படி எறும்புப்புற்றின் மீது அமர்ந்து எறும்புகளை தன் மீது ஊர்ந்து செல்ல அனுமதிக்குமாம், அல்லது எறும்புகளைத் தன் அலகால் எடுத்து தன் மீது விட்டுக்கொள்ளுமாம்.
பயந்துபோன எறும்புகளின் ஆசன வாயின் அருகிலுள்ள சுரப்பிகளிலிருந்து ஒரு பார்மிக் அமில ஸ்பிரே சுரக்குமாம். அந்த ஸ்பிரே காகங்களின் உடலுக்குள் உறிஞ்சப்பட்டு, அது இயற்கை பூச்சிக்கொல்லியாக பயன்படுமாம். அதாவது தன் உடலில் உள்ள பூச்சிகளைக் கொல்வதற்காக காகங்கள் இதை செய்கின்றனவாம்.
இதுபோக, இன்னொரு கருத்தும் உலவுகிறதாம். காகங்களின் உடலில் உள்ள பழைய இறகுகள் உதிர்ந்து புதிய இறகுகள் உருவாகும்போது, அவற்றின் தோலில் அரிப்பு ஏற்படுமாம். அப்போது அந்த அரிப்பை சொரிந்து விடுவதற்காகவும், இறகுகளுக்குள் வாழும் ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்துவதற்காகவும் காகங்கள் இப்படி செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள்.