பெற்றோரை மிஞ்சிய பிள்ளைகள்... சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்துள்ளவர்களின் பிள்ளைகள் குறித்து வெளியாகியுள்ள ஒரு தகவல்
பொதுவாகவே புலம்பெயர்ந்தோரின் பிள்ளைகள் தங்கள் பெற்றோரைவிட கல்வியில் சிறந்து விளங்குவதாக சுவிஸ் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
சுவிஸ் ஊடகம் ஒன்று சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், 24,000 புலம்பெயர்ந்தவர்களின் கல்வித்தரம், அவர்களுடைய பிள்ளைகளின் கல்வித்தரத்துடன் ஒப்பிடப்பட்டது.
குறிப்பாக, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின், துருக்கி, செர்பியா, மாசிடோனியா மற்றும் கொசோவா ஆகிய நாடுகலிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தவர்களின் தரவுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.
அப்போது, பிள்ளைகள், தங்கள் பெற்றோரைவிட கல்வியில் மேம்பட்டிருந்தது தெரியவந்தது.
Keystone / Gian Ehrenzeller
உதாரணமாக, புலம்பெயர்ந்தோர் 15 அல்லது 16 வயதில் பள்ளிப்படிப்பை விட்டிருந்த நிலையில், அவர்களுடைய பிள்ளைகளோ, 18 அல்லது 19 வயது வரை கல்வி கற்றிருந்தார்கள். அதாவது, கிட்டத்தட்ட 60 சதவிகித பிள்ளைகள் இரண்டாவது மட்ட கல்விப்படிப்பை முடித்திருந்தார்கள். 32 சதவிகித பிள்ளைகள் பல்கலைக்கழகக் கல்வியையே முடித்திருந்தார்கள்.
சொந்த நாட்டை விட்டுவிட்டு வேறொரு நாட்டுக்கு வந்து, அதனால் தாங்கள் சந்தித்த பாரபட்சம், மொழிப் பிரச்சினைகள் போன்ற தடைகளையும் தாண்டி கல்வியில் மேம்பட்டிருந்தார்கள் அந்தப் பிள்ளைகள்.
ஆனாலும், கல்வித்தகுதியில் மேம்பட்டு விளங்குவதிலும் நாட்டுக்கு நாடு வித்தியாசம் இருப்பதும் அந்த ஆய்வில் தெரியவந்தது.
உதாரணமாக, ஜேர்மனியிலிருந்து புலம்பெயர்ந்தோரின் பிள்ளைகளில் 54 சதவிகிதத்தினர், பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான கல்வியை முடித்திருக்கும் நிலையில், கொசோவா நாட்டிலிருந்து புலம்பெயர்ந்தோரில் 20 சதவிகிதம்பேர் மட்டுமே பட்டப்படிப்பை எட்டிப் பிடித்திருந்தார்கள்.
ஒருவேளை, அந்த பிள்ளைகளின் பெற்றோர் எவ்வளவு காலமாக சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவருகிறார்கள் எனும் விடயம் இதன் பின்னணியில் இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். உதாரணமாக, பால்கன் சமுதாயம் என அழைக்கப்படும் கொசோவா போன்ற நாடுகளிலிருந்து சமீபத்தில்தான் மக்கள் சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தார்கள். ஆகவே, அவர்களுக்கு மொழி முதலான விடயங்கள் பிரச்சினையாக இருப்பதால் அவர்களுடைய பிள்ளைகளால் அந்த அளவுக்கு கல்வியில் சாதிக்க முடியாமல் போயிருக்கலாம்.
அத்துடன், மற்றொரு நாட்டிலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் பிள்ளைகள் என்ற காரணத்தால் அவர்கள் பள்ளியில் சந்திக்கும் பாரபட்சம் முதலான பிரச்சினைகளும் அவர்களுடைய கல்வியில் முன்னேறுவதற்கு தடையாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.