தொடர்ந்து வயாகரா பயன்படுத்துவோருக்கு ஒரு அபாயம்: வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகள்
தொடர்ந்து வயாகரா போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்ளும் ஆண்களுக்கு, வாழ்வின் ஏதாவது ஒரு பகுதியில் கண் பார்வை கோளாறுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவித்துள்ளன.
கனடாவின் வான்கூவரிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், வயகாரா மற்றும் Cialis போன்ற மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் ஆண்களுக்கு, மற்ற ஆண்களைவிட, கண் பார்வை பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சினைகள் உருவாக 85 சதவிகிதம் அதிக அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இப்படி வயாகராவால் கண் பார்வை இழப்பு அல்லது வேறு பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான் என்றாலும், இந்த பக்க விளைவு குறித்து அதிக அளவில் பேசப்படுவதிலை என அந்த ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஆகவே, வயாகரா போன்ற மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக்கொள்வோர், தங்களுக்கு கண் பார்வையில் ஏதாவது பிரச்சினை ஏற்படுவதை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
இந்த வயாகரா முதலான மாத்திரைகள், பாலின உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் அதே நேரத்தில், உடலின் மற்ற பாகங்களுக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை அவை தடுக்க இயலும் என்பதால், கண்களுக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைவதால் இந்த பாதிப்பு ஏற்படலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.