தமிழகத்தில் மரம் முறிந்து விழுந்து பள்ளி மாணவி பரிதாப மரணம்!
தமிழக மாவட்டம், தஞ்சாவூரில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் மரம் முறிந்து விழுந்து மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு மாணவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
10 ஆம் வகுப்பு மாணவிகள்
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அடுத்த கண்டக்கரயம் மெயின் ரோட்டை சேர்ந்த தம்பதியினர் செந்தில்குமார் மற்றும் பத்மா. இவர்களுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இதில் ஒருவர் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சுஷ்மிதா (15).
அதே போல, கணபதி கிராமம் தட்டாரத்தெருவைச் சேர்ந்த கந்தன் என்பவருக்கு ராஜேஸ்வரி (15) என்ற மகள் உள்ளார்.
இதில், சுஷ்மிதா மற்றும் ராஜேஸ்வரி ஆகிய இருவரும் அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவிலில் உள்ள அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். ஏறக்குறைய இந்த பள்ளியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர்.
மாணவி உயிரிழப்பு
இந்நிலையில், நேற்று மாலை சுஷ்மிதா மற்றும் ராஜேஸ்வரி ஆகிய இருவரும் பள்ளி முடிந்த பின்பு வெளியே வந்தனர். அப்போது பலத்த சூறைக்காற்று ஏற்பட்டது. அதே நேரத்தில் பள்ளி வளாகத்தில் இருந்த மரமானது மாணவிகள் இருவர் மீது விழுந்தது.
இதனை அறிந்த, பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் இடிபாடுகளில் சிக்கிய 2 மாணவிகளையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுஷ்மிதா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ராஜேஸ்வரி படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |