பாரீஸில் கால்பந்துப் போட்டியைக் காணச் சென்ற பிரித்தானியர் சந்தித்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம்
பாரீஸில் கால்பந்து போட்டியைக் காணச் சென்ற பிரித்தானியர் ஒருவர் எதிர்பாராத அசம்பாவிதம் ஒன்றை சந்திக்க நேர்ந்தது.
Liverpool மற்றும் Real Madrid அணிகளுக்கிடையிலான கால்பந்து இறுதிப்போட்டியைக் காண்பதற்காக பாரீஸ் சென்றிருந்தார் பிரித்தானியர் ஒருவர்.
ஏராளமான ரசிகர்கள் கால்பந்துப்போட்டியைக் காண்பதற்காக குவிந்த நிலையில், போலி டிக்கெட்களுடன் சிலர் மைதானத்துக்குள் நுழைய முயல்வதாக சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, ஆயிரக்கணக்கானோரை மைதானத்துக்கு வெளியேயே நிறுத்தினார்கள் போட்டி அமைப்பாளர்கள். அதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பொலிசார் கண்ணீர்ப் புகை குண்டுகள் மற்றும் பெப்பர் ஸ்பிரே பிரயோகிக்கும் ஒரு நிலை உருவானது.
அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட திருடர்கள் சிலர், ரசிகர்கள் விளையாட்டுப் போட்டி முடிந்து உள்ளூர் போக்குவரத்து வாகனங்களில் பயணிக்கும் நேரத்தில் பிக்பாக்கெட் முதல் மிரட்டிப் பணம் பறித்தல் வரை அவர்களிடம் தங்கள் கைவரிசையைக் காட்டினர்.
அப்படி திருடர்களிடம் சிக்கியவர்களில் இந்த பிரித்தானியரும் ஒருவர். அவரிடமிருந்து விலையுயர்ந்த Breitling கைக்கடிகாரம் ஒன்றைத் திருடிச்சென்றிருந்தார்கள் திருடர்கள்.
இந்நிலையில், சந்தேகத்தின்பேரில் ஒருவரைப் பிடித்த பொலிசார் அவரிடமிருந்து அந்த பிரித்தானியரின் கைக்கடிகாரம் முதலான பல்வேறு பொருட்களை மீட்டுள்ளனர்.
அவர்கள் அந்த பிரித்தானியரைத் தேடிக் கண்டுபிடித்து அவரிடம் அவருடைய கைக்கடிகாரத்தை ஒப்படைத்துள்ளதாக பிரான்ஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அந்த கால்பந்துப் போட்டியின்போது சுமார் 240 புகார்கள் பதிவாகியுள்ளதைத் தொடர்ந்து, அடுத்ததாக அடுத்த ஆண்டு கால்பந்து உலகக் கோப்பை மற்றும் 2024ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் ஆகிய இரண்டு முக்கிய நிகழ்வுகள் பிரான்சில் நடைபெற உள்ள நிலையில், பிரான்ஸ் அதிகாரிகள் எப்படி பாதுகாப்பு நடவடிக்கைகளை சரியாக மேற்கொள்வார்கள் என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
Photo by Thomas COEX / AFP