பல மணி நேரம் ரயிலுக்குள் அடைபட்டுத் தவித்த பயணிகள்: சுவிட்சர்லாந்தில் திகிலை ஏற்படுத்திய சம்பவம்
சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலிருந்து ஆஸ்திரியாவிலுள்ள வியன்னா நகரம் நோக்கி புறப்பட்ட ஒரு ரயில், புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென நின்றுவிட்டது.
தீயணைப்புத்துறையினர் வந்து பயணிகளை மீட்டுள்ளார்கள்.
சுவிட்சர்லாந்தில் ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் திடீரென ரயில் நின்றதால் குழப்பமடைந்தார்கள்.
ஆனால், அந்த குழப்பம் உடனே முடிவுக்கு வரவில்லை. மின்சாரம் இல்லாமல் பல மணி நேரமாக ரயில் அங்கேயே நிற்க, பயணிகள் பதற்றமடையத் துவங்கியுள்ளார்கள்.
மின்சாரம் இல்லாததால் ரயிலில் கதவுகளும் திறக்காமல், ஏர் கண்டிஷனர்களும் இயங்காமல் போகவே, மக்கள் திகிலடையத் துவங்கியுள்ளார்கள்.
சுமார் நான்கு மணி நேரம் நடுவழியில் ரயில் நிற்க, மக்கள் மன அழுத்தத்திற்குள்ளாகத் துவங்கியுள்ளார்கள். பிறகு தீயணைப்புத்துறையினர் வந்து பயணிகளை மீட்டுள்ளார்கள்.
பயணிகளில் மூன்று பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
மற்றவர்கள் ரயிலிலிருந்து வெளியேற்றப்பட்டு வேறொரு ரயிலில் ஏற்றப்பட்டு அவர்களுடைய பயணத்தைத் தொடர ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.