விவசாயி ஒருவர் தள்ளிவைத்த ஒற்றைக்கல்... தவிர்க்கப்பட்ட இரு நாடுகளுக்கிடையேயான பெரும் எல்லைப் பிரச்சினை
விவசாயி ஒருவர் இடைஞ்சலாக இருப்பதாக கருதி கல் ஒன்றை தனது ட்ராக்டரின் உதவியால் தள்ளிவைத்தார். தான் இரு நாடுகளுக்கிடையிலான எல்லையையே மாற்றிவைப்பதை அவர் அறிந்திருக்கவில்லை.
பெல்ஜியம் நாட்டிலுள்ள Erquelinnes என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனது இடத்திலிருந்த கல் ஒன்று இடைஞ்சலாக இருப்பதாக கருதி, அதை தனது ட்ராக்டரின் உதவியால் 2.29 மீற்றர் தூரம் தள்ளிவைத்தார்.
தான் செய்த செயல் இரு நாடுகளுகிடையே எவ்வளவு பெரிய பிரச்சினைகளை உருவாக்கும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. அந்தக் கல், பெல்ஜியம் மற்றும் பிரான்சுக்கு இடையிலான எல்லையில் அமைந்திருந்தது. அவர் அந்தக் கல்லை 2.29 மீற்றர் நகர்த்தியதன் மூலம், பெல்ஜியம் 1,000 சதுர அடி பெரிதாகிவிட்டது.
வரலாறு அறிந்த ஒருவர், அந்த பகுதியில் வாக்கிங் செல்லும்போது எல்லைக் கல் இடம் மாறியிருப்பதைக் கவனித்துள்ளார். பெல்ஜியம், பிரான்ஸ் நாடுகளுக்கிடையிலான எல்லை 620 கிலோமீற்றர் நீளமுடையது.
அந்த எல்லையைக் குறிக்கும் அந்தக் கல் அப்பகுதியில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. இது தற்செயலாக நடந்த ஒரு விடயமானாலும், அதன் தாக்கம் இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக பிரச்சினையாக கூட மாற வாய்ப்புள்ளது. ஆனால், அதிர்ஷ்டவசமாக, உள்ளூர் அதிகாரிகள் அதை வேடிக்கையாக எடுத்துக்கொண்டார்கள்.
பெல்ஜியத்தின் Erquelinnes பகுதி மேயரான David Lavauxshared, அந்த கல் இருக்கும் புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டு, தனது நகரம் பெரியதாகிவிட்டது என வேடிக்கையாக தெரிவித்துள்ளார்.
ஆனால், பிரித்தானியாவுடனேயே சண்டைக்கு போக தயாராக இருக்கும் பிரான்ஸ் அதிகாரிகள் இந்த விடயத்தை எப்படி எடுத்துக்கொள்வார்களோ தெரியாதே! ஆக, பெல்ஜியம் அதிகாரிகள், அதே விவசாயியை சந்தித்து, விடயத்தை விளக்கி, அந்த கல்லை அது இருந்த இடத்திலேயே மீண்டும் கொண்டு வைத்துவிடுமாறு கேட்டுக்கொள்ள இருக்கிறார்கள்.
இல்லையென்றால், பிரான்ஸ் பெல்ஜியம் எல்லை ஆணையம் தலையிட்டுத்தான் இந்த பிரச்சினையை சரி செய்ய முடியும். அதைத் தவிர்ப்பதற்காக, பிரச்சினை பெரிதாவதற்கு முன்பே, தாங்களே பிரச்சினையை தீர்த்துவிட முடிவுசெய்துள்ளார்கள் பெல்ஜியம் அதிகாரிகள்!