கொதிக்கும் அலுமினியக் குழம்புக்குள் விழுந்த சுவிஸ் நாட்டவர்: உயிர் பிழைத்த அற்புதம்
சுவிட்சர்லாந்தில், உருகிய சூடான அலுமினியக் குழம்பு இருந்த உலைக்குள் விழுந்த ஒருவர் அற்புத வண்ணமாக உயிர் பிழைத்துள்ளார்.
மின் பழுதுபார்ப்பு வேலை செய்துகொண்டிருந்த நபர்
சுவிட்சர்லாந்தின் St Gallen மாகாணத்தில் அமைந்துள்ள அலுமினிய உருக்காலை ஒன்றில், அலுமினியத்தை உருக்கும் உலையின் மேல் ஏதோ மின் பழுது ஏற்பட்டுள்ளது.
அதை சரி செய்வதற்காக இரண்டு எலக்ட்ரிசியன்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவர்தான் வேலை செய்துகொண்டிருக்கும்போது அலுமினியம் உருக்கிக்கொண்டிருந்த உலைக்குள் தவறி விழுந்துள்ளார்.
அந்த உலையின் வெப்பநிலை 720 டிகிரி செல்ஷியஸ் ஆகும்.
உயிர் பிழைத்த அற்புதம்
அந்த உலைக்குள் அந்த நபர் விழுந்தபோது, அவரது முழங்கால் வரை உருகிய அலுமினியத்துக்குள் மூழ்கியபோதும் எப்படியோ உலையிலிருந்து வெளியே குதித்துள்ளார்.
அந்த மோசமான விபத்தில் அவருக்கு பயங்கரமான தீக்காயங்கள் ஏற்பட்டாலும், அவ்வளவு சூடான உலைக்குள் விழுந்த அவர் உயிர் பிழைத்தது ஆச்சரியம்தான்.
எதனால் இந்த விபத்து நிகழ்ந்தது என்பது குறித்து விசாரித்து வரும் பொலிசார், அவர் விழுந்த உலையின் படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்கள்.