லண்டனில் ஒரு பயங்கர தீ விபத்து: இரண்டு ஜோடி இரட்டைக் குழந்தைகள் பலியான பரிதாபம்
தெற்கு லண்டனிலுள்ள ஒரு வீட்டில் தீப்பற்றியதில் நான்கு குழந்தைகள் பரிதாபமாக பலியாகியுள்ளார்கள்.
நேற்று இரவு 7.00 மணியளவில், தெற்கு லண்டனிலுள்ள வீடு ஒன்றில் தீப்பற்றியது குறித்து தெரியவந்ததையடுத்து, 60 தீயணைப்பு வீரர்கள் 8 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
பயங்கரமாக எரிந்த அந்த தீயை கட்டுக்குள் கொண்டு வர அவர்களுக்கு ஒன்றரை மணி நேரம் ஆகியிருக்கிறது. புகையினூடே சுவாசிக்க உதவும் முகக்கவசங்களை அணிந்துகொண்டு வீட்டுக்குள் நுழைந்த தீயணைப்பு வீரர்கள் அந்த வீட்டுக்குள்ளிருந்த நான்கு குழந்தைகளை தூக்கிக்கொண்டு வெளியே வந்திருக்கிறார்கள்.
முதலுதவிக்குப் பின் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அந்த நான்கு குழந்தைகளுமே உயிரிழந்துவிட்டிருக்கிறார்கள்.
உயிரிழந்த அந்த நான்கு குழந்தைகளுமே ஐந்து வயதுக்குட்பட்டவர்கள். அவர்கள் இரண்டு ஜோடி இரட்டையர்கள் என கூறப்படுகிறது
அவர்கள் மிகவும் இனிமையான, மகிழ்ச்சியான இரட்டையர்கள் என அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், அந்த வீட்டில் எப்படி தீப்பிடித்தது, அந்த வீட்டிலிருந்த பெரியவர்கள் எங்கே, தீ பரவும் முன் யாராவது வீட்டிலிருந்து தப்பினார்களா என எந்த விவரமும் தற்போது வெளியாகவில்லை.
இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த குழந்தைகளின் பெயர்கள் முறையே Kyson, Bryson, Keyton மற்றும் Logan என தெரியவந்துள்ளது.
தற்போது, குழந்தைகளை கவனிக்கத் தவறியதாக 27 வயது இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.