சுவிட்சர்லாந்து உயிரியல் பூங்காவில் பெண்ணைக் குதறிக்கொன்ற புலி... விசாரணை அதிகாரிகளின் முடிவு
சூரிச்சிலுள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் காப்பாளராக பணிபுரிந்துவந்த ஒரு பெண்ணை, புலி ஒன்று கடித்துக் குதறி கொன்றது.
55 வயதான எஸ்தர் என்னும் அந்த உயிரியல் பூங்கா காப்பாளர், 20 ஆண்டுகளாக அங்கு பணிபுரிந்துவந்துள்ளார்.
சென்ற ஆண்டு ஜூலை மாதம், அவர் புலிகள் அடைத்துவைக்கப்பட்டுள்ள இடத்தை சுத்தம் செய்யச் சென்றுள்ளார்.
அவர், இத்தனை ஆண்டுகளாக நாம் உணவளித்து வளர்த்த புலிதானே, நம்மை என்ன செய்யும் என்று நினைத்தாரோ என்னவோ, ஆனால், அந்த புலி அதையெல்லாம் யோசிக்குமா என்ன, அவரைக் கடித்துக்குதறி கொன்றுவிட்டது.
ஐரினா என்னும் அந்த சைபீரிய புலி எஸ்தரைத் தாக்குவதைக் கண்ட பார்வையாளர் ஒருவர் அபயக் குரல் எழுப்ப, விரைந்துவந்த பூங்கா அலுவலர்கள் பலர் அந்த புலியின் கவனத்தை திசை திருப்ப முயன்றுள்ளார்கள்.
ஆனால், அதற்குள் காலதாமதமாகிவிட்டது, எஸ்தர் அந்த இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தார்கள்.
தற்போது அவர்கள் தங்கள் விசாரணையின் முடிவை வெளியிட்டுள்ளார்கள். எப்போதுமே புலி, சிங்கம் முதலான விலங்குகள் அடைத்துவைக்கப்பட்ட கூண்டுகளுக்குள் மனிதர்களிடமிருந்து அவற்றை பிரித்து வைக்கும் வகையில் கதவுகள் இருக்கும். கூண்டுகளை சுத்தம் செய்யச் செல்வோர், அந்த புலியோ சிங்கமோ தன்னை நெருங்காதவகையில் அந்த கதவுகளை பூட்டிவிட்டுத்தான் கூண்டுகளுக்குள் செல்லவேண்டும்.
ஆனால், எஸ்தர் அப்படி கதவுகளை பூட்டாமலே கூண்டுக்குள் சென்றிருக்கிறார். ஆகவே, கூண்டின் கட்டுமானத்தின் தொழில்நுட்பத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும், சதித்திட்டம் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ள அதிகாரிகள், எஸ்தரின் கவனக்குறைவாலேயே இந்த விபத்து நடந்துள்ளது என்று கூறி வழக்கை முடித்துவைத்துள்ளார்கள்.