மொத்தம் 110 பெண்கள்... பிரித்தானியாவை நடுக்கிய சம்பவம்: ஸ்தம்பித்த நாடாளுமன்றம்
கடந்த ஓராண்டில் மட்டும் பிரித்தானியாவில் 110 பெண்கள் வன்முறைக்கு இலக்காகி ஆண்களால் கொல்லப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெஸ் பிலிப்ஸ் பட்டியல் ஒன்றை வாசித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்விலேயே தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஜெஸ் பிலிப்ஸ், கடந்த ஓராண்டில் ஆண்களால் கொல்லப்பட்ட பெண்கள் 110 பேர்களின் பெயர்களை வாசித்து, எஞ்சிய உறுப்பினர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இதுவரை நாம் எத்தனை மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்கியுள்ளோம் என்பது குறித்து தெரிந்து வைத்திருக்கிறோம், யார் யாருக்கு பொருளாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் அறிந்து வைத்திருக்கிறோம், நமது தனிப்பட்ட புகழுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக முன்னெடுக்கிறோம், ஆனால் நமது நாட்டில் கொடூரமாக கொல்லப்படும் பெண்கள் தொடர்பில் நாம் எவ்வித கவலையும் கொள்வதில்லை எனவும் அது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை நாம் கவலைப்படுவதில்லை என ஜெஸ் பிலிப்ஸ் காட்டமாக பதிவு செய்துள்ளார்.
பெண்கள் கொல்லப்படுவது எப்போதாவது நிகழும் அரிய நிகழ்வாக இல்லாமல், தற்போது அது பொதுவான ஒரு நிகழ்வாக மாறியுள்ளது என்றார் ஜெஸ் பிலிப்ஸ்.
கடந்த ஓராண்டில் கொல்லப்பட்ட 110 பெண்களின் பெயர்களையும் வாசித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜெஸ் பிலிப்ஸ், கடந்த இரு நாட்களாக நாட்டின் மொத்த ஊடகங்களும் சாரா எவரார்ட் பெயரையே அடிக்கடி நினைவூட்டி வருகிறது.
இப்போது வாசிக்கப்பட்ட அந்த 110 பெண்களின் பட்டியலில் சாரா எவரார்ட் பெயரும் இடம்பெறாமல் இருக்க நாம் வேண்டுவோம்.
இந்த பட்டியலில் மீண்டும் யாருடைய பெயரும் இடம்பெறாது என்பதை உறுதிப்படுத்த ஒவ்வொரு நாளும் வேண்டுவோம், அதற்காக ஒவ்வொரு நாளும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

