4 குழந்தைகளை கொன்றதாக 40 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற தாயின் வழக்கில் திருப்பம்: மரபணு ஆய்வில் தெரியவந்த உண்மை
அவுஸ்திரேலியாவில், தனது நான்கு குழந்தைகளை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண், சிறையில் இருந்து விடுவிக்கப்படலாம் என வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மரபணு பரிசோதனையில் அவரது குழந்தைகளில் குறைந்தது 2 பேர் இதயத்தில் ஏற்பட்ட சிக்கல்களால் இறந்துவிட்டதாக தற்போது தெரியவந்துள்ளது.
Kathleen Folbigg எனும் 53 வயதாகும் அப்பெண், ஏற்கனவே 18 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துவரும் நிலையில், அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு அவுஸ்திரேலியாவின் அறிவியல் குழு, நியூ சவுத் வேல்ஸ் ஆளுநரை வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
Kathleen Folbigg-ன் நான்கு குழந்தைகள் 1989 மற்றும் 1999-க்கு இடையில் இறந்தனர். நியூ சவுத் வேல்ஸின் உச்சநீதிமன்றம் Folbigg-ற்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
ஒரு பெற்றோருக்கு பிறந்த எல்லா குழந்தைகளும் இயற்கையான காரணங்களால் இறக்க முடியாது என்ற கருத்தை விஞ்ஞானக் கொள்கை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Folbigg-ன் வழக்கறிஞர்கள் அவர் கொலை செய்யவில்லை என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லாததை மேற்கோள் காட்டி, அவர் நிரபராதி என்றும் அவரது தண்டனையை குறைந்தது 30 ஆண்டுகளாக குறைக்க வாதிட்டுவந்தனர்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஒரு மரபணு ஆய்வு, Folbigg-ன் நான்கு குழந்தைகளும் இயற்கை காரணங்களால் இறந்திருக்கலாம் என்று பரிந்துரைத்தது.
ஃபோல்பிக்கின் குழந்தைகளில் குறைந்தது இருவர் இதய பிரச்சினைகளால் இறந்துவிட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இது அவர்களின் CALM2 மரபணுக்களில் உள்ள பிறழ்வுகள் காரணமாக ஏற்படக்கூடும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை நடத்திய 90-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் நியூ சவுத் வேல்ஸ் ஆளுநருக்கு Folbigg-கிற்கு மன்னிப்பு வழங்குமாறு கடிதம் அனுப்பியுள்ளனர்.
ஆளுநருக்கு கடிதம் எழுதிய விஞ்ஞானிகள் குழுவில், இரண்டு அவுஸ்திரேலிய நோபல் பரிசு பெற்றவர்களும் அடங்குவர்.
இந்த வழக்கில் ஏற்பட்டுள்ள திருப்பம் ஒரு வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே பரோல் இல்லாமல் 18 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த Folbigg விரைவில் விறுவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.