புயல் பெருவெள்ளத்தைத் தொடர்ந்து சுவிஸ் மாகாணமொன்றில் வாழும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஞாயிற்றுக்கிழமை சுவிட்சர்லாந்தின் மேற்கு பகுதி தொடங்கி கிழக்குப் பகுதி நோக்கி நகர்ந்த புயல் காரணமாக, சுவிட்சர்லாந்தின் மையப்பகுதி பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
புயல் மற்றும் பெருவெள்ளத்தைத் தொடர்ந்து, Bern மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் தரைத்தளங்களில் வெள்ளம் புகுந்ததையும், தெருக்கள் சேதமடைந்ததையும் காட்டும் புகைப்படங்கள் வெளியாகின.
இந்நிலையில், குடிதண்ணீரில் வெள்ளம் கலந்ததையடுத்து, Bern மாகாணத்தில் வாழும் மக்கள் தண்ணீரைக் காய்ச்சிக் குடிக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.
தண்ணீரில் நோய்க்கிருமிகள் கலந்திருக்க வாய்ப்புள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், போத்தல்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் சுத்தமான தண்ணீரை, குடிப்பதற்கும், குழந்தைகளுக்கு உணவாக கொடுப்பதற்கும் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிருமிகளால் பாதிக்கப்பட்ட தண்ணீரை யாராவது குடித்திருந்தால், காய்ச்சலோ, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியோ ஏற்படுகிறதா என்பதைக் கவனித்து, அப்படி ஏதும் நடந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
அடுத்த சில நாட்களுக்கு குடிதண்ணீரில் குளோரின் வாசனை இருக்கலாம் என்றும், தண்ணீரின் நிறம் சற்று மாறியிருக்கலாம் என்றும், தண்ணீரில் கிருமி நீக்கம் செய்யப்படுவதால் இப்படி இருக்கும் என்றும், அதனால் உடல் நலத்துக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தண்ணீரைக் குடிப்பது மட்டுமல்ல, அந்த தண்ணீரைக் கொண்டு பல் துலக்குவது, பாத்திரம் கழுவுவது ஆகியவை கூட பிரச்சினையை ஏற்படுத்தலாம் என்றும், அதே நேரத்தில், குளிக்க, துணி துவைக்க அந்த தண்ணீரை பயன்படுத்துவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.