பிரான்சில் வாழும் பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி!
பிரான்சில், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த கணவர் அல்லது மனைவியுடன் வாழும் பிரித்தானியர்களுக்கு அவசர செய்தி ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த கணவர் அல்லது மனைவியுடன் வாழும் பிரித்தானியர்கள் பலர், பிரித்தானியாவுக்கு திரும்ப முற்படும் நிலையில், அவர்கள் எதிர்பாராத சிக்கல் ஒன்றுக்கு உள்ளாகியுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் பல செய்திகளை வெளியிட்டுள்ளன.
விடயம் என்னவென்றால், முன்பு பிரித்தானியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடு ஒன்றிற்குச் செல்லும் பிரித்தானியர்கள், அங்குள்ள ஒருவருடன் காதலில் விழுந்து, அவர்களை திருமணம் செய்துகொள்வதும், பின்னர் இருவருமாக பிரித்தானியா திரும்புவதும் சாதாரணமாக ஒன்றாக இருந்தது, அது பிரெக்சிட்டுக்கு முன்!
இப்போது, ஒரு பிரித்தானியர், ஐரோப்பிய ஒன்றிய நாடு ஒன்றைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்திருந்தால், அவர்கள் இருவரும் மீண்டும் பிரித்தானியா திரும்ப திட்டமிடும் பட்சத்தில், அந்த பிரித்தானியர் எளிதாக பிரித்தானியா திரும்பி விடலாம்.
ஆனால், அவரது கணவர் அல்லது மனைவி பிரித்தானியா திரும்புவது இனி, குறிப்பாக, மார்ச் 31க்குப் பின், அவ்வளவு எளிதல்ல!
அவர்கள் முழுமையாக விசா பெறும் ஒரு திட்டத்துக்கு உட்படவேண்டும். அதாவது, மொழித்திறன், போதுமான நிதி கையிருப்பு முதலான அனைத்து தகுதி நிலைகளையும் உடையவர்கள் மட்டுமே இனி பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
மற்றவர்களுக்கு? அனுமதி அவ்வளவு எளிதல்ல!
இதுபோக, ஏற்கனவே பிரித்தானியா வந்துவிட்ட, ஐரோப்பிய ஒன்றிய நாடு ஒன்றைச் சேர்ந்த பிரித்தானியரின் கணவர் அல்லது மனைவியும், மீண்டும் பல்வேறு ஆவணங்களைப் பூர்த்தி செய்யவேண்டியிருக்கும்.
விடயம் என்னவென்றால், ஆவணங்கள் நிரப்பவேண்டும் அவ்வளவுதானே என சிலர் எளிதாக நினைக்கிறார்கள். ஆனால், பலருக்கு அந்த ஆவணங்களைப் பூர்த்தி செய்வது, விண்ணப்பிப்பது போன்ற விடயங்களை முடிக்க பல மாதங்கள் ஆகியுள்ளது. இதனால், குடும்பங்கள் நீண்ட நாட்கள் பிரிந்திருக்கவேண்டிய ஒரு நிலைமையும் உருவாகியுள்ளது.
எனவே, பிரித்தானியா திரும்ப விரும்பும் ஐரோப்பிய ஒன்றிய நாடு ஒன்றைச் சேர்ந்த கணவர் அல்லது மனைவியைக் கொண்ட பிரித்தானியர்கள், உடனடியாக தக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்.
இரட்டைக் குடியுரிமை கொண்ட பிள்ளைகளுக்கு தங்கள் பெற்றோருடன் பிரித்தானியாவுக்குத் திரும்புவதில் பிரச்சினை இருக்காது என்றாலும், பிரித்தானிய குடியுரிமை இல்லாத பிள்ளைகள், தங்களுக்கு 18 வயதாகும்போது, புலம்பெயர்தல் நடைமுறைக்கு உட்படவேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்களுக்கு...
https://www.thelocal.fr/20210915/brits-living-in-france-warned-of-immigration-problems-for-french-partners-in-uk/