ஒருவருக்கு கொரோனா இருக்கிறதா என்பதை கண்டுபிடித்துச் சொல்லும் கைக்கடிகாரம்: பிரித்தானியா ஆய்வாளர்களின் வித்தியாச முயற்சி
ஒருவருக்கு கொரோனா உள்ளதா என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லும் கைக்கடிகாரம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் பிரித்தானிய ஆய்வாளர்கள் இறங்கியுள்ளார்கள்.
பிரித்தானிய அரசின் இரகசிய ஆய்வகமான Porton Down ஆய்வகம்தான், ஒருவருக்கு கொரோனா தொற்றியுள்ளதா என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லும் கைக்கடிகாரத்தை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
ஆய்வக அறிவியலாளர்களில் ஒருவரான பேராசிரியர் Tim Atkins கூறும்போது, தங்கள் ஆய்வகம், கைக்கடிகாரம் போன்ற உடலில் அணியும் உபகரணங்கள் பதிவு செய்யும் தரவுகள் மூலம் கொரோனாவைக் கண்டறிய முடியுமா என்னும் ஆராய்ச்சியில் தற்போது இறங்கியுள்ளதாக தெரிவித்தார்.
ஒருவருடைய இதய துடிப்பு, உடல் இயக்கம் மற்றும் இரத்தத்தில் ஆக்சிஜனின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவருக்கு கொரோனா தொற்றியுள்ளதா என கண்டுபிடிப்பது இந்த ஆய்வின் நோக்கமாகும்.
இப்போதைக்கு இந்த ஆய்வு ஆரம்பகட்டத்தில்தான் உள்ளது என்றாலும், அது வெற்றி பெற்றால், ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் தெரியவருவதற்கு முன்பே இந்த கைக்கடிகாரம் கொரோனா தொற்றைக் கண்டுபிடித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே Porton Down ஆய்வகம் கொரோனா தொடர்பான பல ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளது. தடுப்பூசிகள் புதிய திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்களை எதிர்க்குமா என்பது அந்த ஆய்வுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
