மொத்த குடும்பமும் நிலச்சரிவில் புதைந்ததால் தனியாளான பெண்.., தற்போது கரம் பிடிக்க இருந்தவரும் விபத்தில் மரணம்
வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் உள்ள அனைவரையும் பறிகொடுத்த பெண்ணை திருமணம் செய்யவிருந்த இளைஞரும் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிலச்சரிவில் உயிரிழப்பு
இந்திய மாநிலமான கேரளா, வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 200 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இதில், வெள்ளார்மல அரசு பள்ளி மண்ணுக்குள் புதைந்தது. இந்த பள்ளிக்கு அருகே சிவண்ணன் என்பவரின் குடும்பம் வசித்து வந்துள்ளது. இவரின் குடும்பத்தில் மொத்தம் 9 பேர் உள்ளனர்.
இதில், மூத்த மகள் சுருதியை தவிர மற்ற அனைவரும் மண்ணில் புதைந்து உயிரிழந்துள்ளனர். சிவண்ணன், மனைவி சபிதா, தந்தை போமலப்பன், தாய் சாவித்திரி, மகள்கள் ஸ்ருதி, ஸ்ரேயா ஆகியோர் ஒரு வீட்டிலும், பக்கத்துக்கு வீட்டில் சிவண்ணனின் சகோதரர் மற்றும் அவரது மனைவி மகள் என வசித்து வந்துள்ளனர்.
இதில், மகள் ஸ்ருதி கோழிக்கோடு மிம்ஸ் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். மற்றொரு மகள் ஸ்ரேயா கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்நிலையில், தங்கை ஸ்ரேயாவின் உடல் மேப்பாடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்ததை பார்த்த ஸ்ருதி கதறி அழுதார். அதனை பார்த்தவர்களுக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தியது.
வரும் டிசம்பர் மாதம் ஸ்ருதிக்கு திருமணம் நடத்த அவரது பெற்றோர்கள் திட்டமிட்டுள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை செய்துவந்த நிலையில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.
காதலன் மரணம்
இதில், ஸ்ருதியின் திருமணத்திற்காக அவரது பெற்றோர் வைத்திருந்த ரூ.4 லட்சம் பணம் மற்றும் 15 பவுன் நகைகள் உள்ளிட்ட அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
பின்னர், மொத்த குடும்பத்தையும் இழந்த ஸ்ருதிக்கு அவருடைய காதலனான ஜென்சன் ஆதரவாக இருந்தார். நிவாரண முகாமில் இருந்த ஸ்ருதியுடன் ஜென்சன் இருக்கும் புகைப்படங்களும் பரவின.
ஸ்ருதியை கைவிட மாட்டேன் என்றும் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என்றும் ஜென்சன் உறுதியாக கூறினார். பின்னர், முகாமில் இருந்த ஸ்ருதி வாடகை வீட்டிற்கு மாறினார்.
இந்த மாதம் இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், ஸ்ருதி மற்றும் அவரது தோழிகள் சிலருடன் ஜென்சன் வேனில் சுற்றுலா தலத்துக்கு சென்றிருந்தார். இதில் வேனை ஜென்சன் ஒட்டியுள்ளார்.
அப்போது, வெள்ளரம்குன் என்ற பகுதியில் சென்ற போது அவர்களது வேனின் மீது எதிரே வந்த தனியார் பஸ் மோதியது. இதில் வேனின் முன்பகுதி பெரும் சேதம் அடைந்தது.
இதனால் முன்பகுதியில் இருந்த ஜென்சன் மற்றும் ஸ்ருதி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்களை மீட்டு இருவரையும் வெவ்வேறு தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.
இதில், சிகிச்சை பெற்று வந்த ஜென்சன் நேற்று உயிரிழந்தார். ஸ்ருதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும், ஜென்சனின் உயிரிழப்பு குறித்து ஸ்ருதிக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |