கனடாவில் மொழி கற்பதற்காக பேருந்தில் சென்றுகொண்டிருந்த இளம்பெண்: விபத்தால் நேர்ந்த பரிதாபம்
மொழி வகுப்புகளில் பங்கேற்பதற்காக கியூபெக்கிலிருந்து பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பயணித்துக்கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கியூபெக்கில் வாழ்ந்துவந்த அந்த 19 வயது இளம்பெண், Kootenays என்ற இடத்தில் அமைந்துள்ள Selkirk College என்ற கல்லூரியில் மொழிப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்வதற்காக கடந்த மாதம் (ஜூன்) 30 ஆம் திகதி, 16 மாணவமாணவிகளுடன் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த பேருந்தை முந்த முயன்ற வேன் ஒன்று பேருந்தின் மீது பயங்கரமாக மோதியுள்ளது.
அந்த விபத்தில், ஜன்னலோரமாக அமர்ந்திருந்த அந்த மாணவி படுகாயம் அடைந்துள்ளார். அவரது சக மாணவர்கள் அவருக்கு முதலுதவி செய்து, அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.
இந்நிலையில், திங்கட்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி அந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக Selkirk கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அந்த இளம்பெண் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது போன்ற விடயங்களும், அவரது பெயர் முதலான விவரங்களும் வெளியிடப்படவில்லை.