குழந்தைகளுக்கான ஆதார் அட்டை புதுப்பிப்பு.., பெற்றோர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
குழந்தைகளுக்கான ஆதார் அட்டை புதுப்பிப்பைத் தொடங்க UIDAI ஒரு பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஆதார் அட்டை புதுப்பிப்பு
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அடுத்த இரண்டு மாதங்களில் பள்ளிகள் மூலம் குழந்தைகளுக்கான ஆதார் அட்டைகளின் பயோமெட்ரிக் புதுப்பிப்பை விரைவுபடுத்துவதற்காக நாடு தழுவிய முயற்சியைத் தொடங்க உள்ளது.
இந்த முயற்சி, பயோமெட்ரிக் விவரங்கள் இன்னும் புதுப்பிக்கப்படாத 7 கோடிக்கும் அதிகமான குழந்தைகளை உள்ளடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
UIDAI தலைமை நிர்வாக அதிகாரி புவனேஷ் குமார் கூறுகையில், "தற்போது இந்த தொழில்நுட்பத்தை சோதித்து வருவதாகவும், அடுத்த 45-60 நாட்களில் இது தயாராகிவிடும். இந்த திட்டம் படிப்படியாக பள்ளிகளில் தொடங்கி பின்னர் கல்லூரிகளுக்கு நீட்டிக்கப்படும், இது 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான இரண்டாம் சுற்று புதுப்பிப்புகளுக்காக விரிவுபடுத்தப்படும்.
UIDAI வழிகாட்டுதல்களின்படி, ஒரு குழந்தைக்கு 5 வயது ஆனதும் பயோமெட்ரிக் புதுப்பிப்புகள் கட்டாயமாகும். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் தரவு இல்லாமல் ஆதார் வழங்கப்படுகிறது.
7 வயதிற்கு முன் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பை (MBU) முடிக்கத் தவறினால், ஆதார் எண் செயலிழக்க நேரிடும். 5–7 வயதுக்கு இடைப்பட்ட புதுப்பிப்புகள் இலவசம், ஆனால் 7 வயதிற்குப் பிறகு ரூ.100 கட்டணம் பொருந்தும்.
பல அரசுத் திட்டங்களின் கீழ் சலுகைகளை வழங்குவதற்கு ஆதார் மிக முக்கியமானது. குழந்தைகள் அனைத்து சலுகைகளையும் சரியான நேரத்தில் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பள்ளிகள் மூலம், முடிந்தவரை பல குழந்தைகளை வசதியான முறையில் சென்றடைய முயற்சிக்கிறோம்"என்றார்.
இதற்கிடையில், ஆதாரில் தங்கள் பயோமெட்ரிக்ஸை இன்னும் புதுப்பிக்காத ஏழு வயதை எட்டிய குழந்தைகளுக்கு கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பை (MBU) முடிப்பதன் முக்கியத்துவத்தை UIDAI மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தங்கள் குழந்தையின் விவரங்களை எந்த ஆதார் சேவா கேந்திரா அல்லது நியமிக்கப்பட்ட ஆதார் மையத்திலும் புதுப்பிக்கலாம்.
பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள UIDAI, தங்கள் குழந்தைகளின் ஆதார் அட்டையைப் புதுப்பிக்கவில்லை என்றால் அவர்கள் ஆதார் எண் செயலிழக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது.
7 வயதுக்குப் பிறகும் MBU முடிக்கப்படாவிட்டால், தற்போதுள்ள விதிகளின்படி ஆதார் எண் செயலிழக்கப்படலாம் என்று UIDAI தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |