ஆடி ஸ்பெஷல்: ஆடி பால் பாயாசம் செய்வது எப்படி? 10 நிமிட ரெசிபி
ஆடி மாதத்தில் சிலர் வீடுகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம்.
அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் பூஜைகள் கண்டிப்பாக இருக்கும்.
இப்படி செய்யும் பொழுது அம்மனுக்கு பிரசாதமாக படைப்பதற்கு பாயாசம், வடை, சுண்டல் என்று செய்வார்கள். வீட்டில் ஆடி மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமை நாளில் மாலை வேளையில் அம்மனுக்கு ருசியான பாயசம் செய்து படைத்தால் பலன்கள் அதிகரிக்கும் என்கிறார்கள்.
ஆடி பால் என்பது ஆடி மாதங்களில் அம்மனுக்கு செய்து படைக்கும் ஒரு பிரசாதமாகும். இந்த ஆடி பால் சுவையானது மட்டுமின்றி, உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும். வழக்கத்தை விட இதற்கு அதிகமாக தேங்காய் பால் சேர்ப்பதால் வயிற்று புண்களும், செரிமான பிரச்சினைகளும் குணமாகும்.
அந்த வகையில், ஆடி பால் பாயாசம் எப்படி 10 நிமிடங்களில் செய்யலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- துருவிய தேங்காய் - 1 கப்
- ஏலக்காய் - 6
- தண்ணீர் - 2 கப்
- பாசிப்பருப்பு - 2 டீஸ்பூன்
- முந்திரி - 20
- வெல்லம் - 1/2 கப்
- நெய் - 1 டீஸ்பூன்
பாயசம் செய்முறை
முதலில் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், ஏலக்காய் போட்டு தண்ணீர் கொஞ்சமாக சேர்த்து இரண்டையும் மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
முதல் தேங்காய் பாலை வடிகட்டி எடுத்து தனியாக வைத்து கொண்டு அதே தேங்காயை மீண்டும் ஜாரில் போட்டு, 3/4 கப் நீரை ஊற்றி அரைத்து கொள்ளவும். இரண்டாவது தேங்காய் பாலையும் தனியாக வைத்து கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பயறு போட்டு வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். அதனுடன் 10 முந்திரி போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி தனியாக அரைத்து எடுக்கவும். பின்னர், 1/2 கப் பொடித்த வெல்லத்தை சேர்த்து, அதில் 1/2 கப் நீரை ஊற்றி வெல்லத்தை கரைத்து கொள்ளவும்.
வெல்லம் கரைந்ததும், பாயாசம் செய்யும் பாத்திரத்தில் அந்த வெல்லத்தை வடிகட்டி எடுத்து, அடுப்பில் வைத்து பாசிப்பருப்பு முந்திரி கலவையுடன் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
அதனுடன் எடுத்து தனியாக வைத்திருக்கும் இரண்டாம் தேங்காய் பாலை ஊற்றி கிளறி, 1 நிமிடம் கொதிக்க விட்டு, முதல் தேங்காய் பாலை ஊற்றி அடுப்பை அணைக்கவும்.
இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி முந்திரியை சேர்த்து ப்ரை செய்து விட்டு தனியாக வைத்திருக்கும் பாயாசத்துடன் சேர்த்து கிளறினால் ஆடி பால் பாயாசம் தயார்!