ஒரே இரவில் நீங்கள் மோசமான வீரர் ஆகி விட மாட்டீர்கள் கோலி: அதிரடி ஜாம்பவான் ஆதரவு
நீங்கள் ஒரே இரவில் மோசமான வீரர் ஆகி விட மாட்டீர்கள் என கோலிக்கு ஆதரவாக முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் பேசியுள்ளார்.
விராட் கோஹ்லி 100 போட்டிகளுக்கும் மேல் அனைத்து வித கிரிக்கெட்டிலும் சதம் அடிக்க திணறி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு வழியாக அரைசதம் அடித்தாலும், வழக்கமான அதிரடி ஆட்டத்தை அவரிடம் காண முடியவில்லை. இதனால் கடுமையான விமர்சனங்களை கோலி சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக பெங்களுரு அணி முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் பேசியுள்ளார். அவர் கூறும்போது, 'ஒரு பேட்ஸ்மேனாக நீங்கள் மோசமான பார்மில் இருக்கலாம். ஆனால் அதே நிலை தொடர்ந்தால் அதிலிருந்து மீள்வது கடினம். பார்ம் என்பதை ஒரு சதவீதத்தில் என்னால் வைக்க முடியாது. ஆனால் அது மனத்துடன் போரிடும் வலிமையான மனநிலையை பொறுத்தது.
ஒரே இரவில் நீங்கள் மோசமான வீரர் ஆகி விட மாட்டீர்கள். விராட்டிற்கும் எனக்கும் அது நன்கு தெரியும். நீங்கள் நினைக்கும் விதம் தான் உங்கள் மனதை அமைக்கும் விதம் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் விளையாடும் போதெல்லாம் உங்களுக்கு தெளிவான மனமும், புத்துணர்ச்சியும் தேவை. பின்னர் நீங்கள் ஒரு துளையிலிருந்து ஒரு வழியைக் கண்டுபிடிக்கலாம்' என தெரிவித்துள்ளார்.