வெளிநாடு ஒன்றில் கடத்தல் கும்பல் அராஜகம்: அமெரிக்க மிஷனெரிகளுடன் கனேடியர் ஒருவரும் கடத்தல்
ஹெய்தி நாட்டில் ஆயுதமேந்திய கும்பல் ஒன்று அமெரிக்க மிஷனெரிகளின் குடும்பங்களைக் கடத்திச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர்களில் ஒரு கனேடியரும் அடக்கம் என தெரியவந்துள்ளது
16 அமெரிக்க கிறிஸ்தவ மிஷனெரிகள், கனேடிய குடிமகன் ஒருவர் மற்றும் பல சிறுபிள்ளைகளை 400 Mawozo gang என்று அழைக்கப்படும் கும்பல் கடத்திச் சென்றுள்ளது.
மிஷனெரிகள் சிலரை விமான நிலையத்திற்கு அனுப்புவதற்காக பேருந்து ஒன்றில் இந்த மிஷனெரிகள் சென்ற நிலையில், அவர்கள் சென்ற பேருந்து, தலைநகர் Port-au-Princeஇல் அமைந்துள்ள, Ganthier என்ற இடத்தில் வைத்து கடத்தப்பட்டுள்ளது.
கடத்தப்பட்டவர்களில் ஒருவர் வாட்ஸ் ஆப் குழு ஒன்றிற்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளார். அதில், ’எங்களுக்காக பிரார்த்தனை செய்துகொளுங்கள், நாங்கள் பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டிருக்கிறோம். எங்கள் சாரதியை கடத்திவிட்டார்கள். எங்களை எங்கே கொண்டு செல்கிறார்கள் என்று தெரியவில்லை’ என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், இந்த கடத்தல் தொடர்பாக தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை என ஹெய்தி பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விவரங்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில், ஹெய்தியிலுள்ள கனேடிய அரசு அதிகாரிகள், மேலதிக தகவல்களை சேகரிப்பதற்காக உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றிவருவதாக கனடா அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களுக்குள்ளாகவே, ஹெய்தியில் 328 கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.