40ஆண்டுகள்.. காட்டில் தனியாக வசிக்கும் பிரித்தானிய வனமகன்! அவரே பகிர்ந்த ருசிகர தகவல்கள் இதோ
பிரித்தானியாவை சேர்ந்த நபர் ஒருவர் 40 ஆண்டுகளாக காட்டில் தனியாக வாழ்ந்து வருகிறார்.
பிரித்தானியாவை சேர்ந்த கென் ஸ்மித் என்பவர் ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸில் உள்ள காட்டில் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
கையால் செய்யப்பட்ட மரத்தடி அறையில் மின்சாரம் மற்றும் குழாய் நீர் வசதியின்றி வாழ்ந்து வருகிறார். 74 வயதான கென் ஸ்மித் உணவு தேடுதல், மீன் பிடித்தல், விறகு சேகரித்தல் போன்ற வேலைகளை செய்து வருகின்றார்.
ஸ்மித் கென் தனது 26 வயதில் யாருடைய உதவி இல்லாமல் வாழ வேண்டும் என்று நினைத்து அவரது தனிமை பயணத்தை தொடர்ந்தார். அப்போது அவரது ஆர்வம் காடுகள் நிறைந்த பகுதிகளுக்கு திரும்பியது.
இதையடுத்து பெற்றோர்கள், உறவினர்கள் என அனைவரையும் உதறி விட்டு சுமார் 22,000 மைல் நடைப்பயணம் தொடர்ந்தார்.
பல மைல்களை கடந்த இவர் கடைசியில் ஆள் நடமாட்டம் இல்லாத லோச்சின் என்ற வனப்பகுதியை கண்டு அந்த இடத்திலேயே அவரது வாழ்க்கையை வாழ தொடங்கியுள்ளார்.
ஆனால் அப்பகுதியில் மின்சாரம், எரிவாயு, குழாய் நீர் போன்ற வசதி எதுவும் இல்லை. குறிப்பாக செல்பேசி சிக்னல் அங்கு இல்லவே இல்லை.
இது குறித்து ஸ்மித் கூறியதாவது, இது ஒரு நல்ல வாழ்க்கை.. எல்லோரும் இப்படி செய்ய விரும்புகிறார்கள். ஆனால் யாரும் செய்ய முன் வர மாட்டார்கள்.
நாம் அனைவரும் பூமியிலேயே நிரந்தரமாக இருப்பவர்கள் கிடையாது. நிச்சயமாக எனது இறுதி நாட்கள் வரும் வரை நான் இங்கேயே இருப்பேன். நிறைய கொடூர சம்பவங்கள் எனக்கு நடந்துள்ளன.
ஆனால் அனைத்திலும் நான் தப்பிப்பிழைத்தேன். எப்போதாவது நான் மீண்டும் நோய்வாய்ப்பட்டாலும் நான் 102 வயது வரையாவது வாழ்வேன் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.