அந்த பையன் என்னைக் குத்திவிட்டான்... 19 முறை கத்தியால் குத்தப்பட்ட பெண்: கனடாவில் நடந்த சம்பவத்தில் முக்கிய நிகழ்வு
கனடாவில் மன நல மையம் ஒன்றில் பணியாற்றி வந்த பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் 19 முறை கத்தியால் குத்திய வழக்கில், தற்போது தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார் அந்த இளைஞர்.
கால்கரியிலுள்ள மன நல மையம் ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்திருக்கிறார் Brandon Newman. தற்போது அவருக்கு 20 வயதாகிறது.
2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் திகதி இரவு 11 மணிக்குள் மையத்துக்கு வரவேண்டிய Brandon, அதிகாலை 2 மணிக்குத்தான் வந்ததை கவனித்த Deborah Onwu என்ற மைய ஊழியர் ஒருவர், அதைக் குறித்து தன் சக ஊழியரிடம் கூறிவிட்டு, அவரை விசாரிக்க சென்றிருக்கிறார்.
சிறிது நேரத்தில், அந்த அறையிலிருந்து சண்டையிடுவது போல சத்தம் கேட்டிருக்கிறது. பின்னர், ஏன் இப்படி செய்தாய் என Deborah அலறும் சத்தத்தை அவரது சக ஊழியர்கள் கேட்டிருக்கிறார்கள்.
என்ன நடந்தது என்பதைப் பார்ப்பதற்காக ஒரு ஊழியர் செல்ல, அவர் கண்ட காட்சி அவரை கடுமையாக அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
உடல் முழுவதும் இரத்தம் சொட்டச் சொட்ட மாடியிலிருந்து இறங்கி வந்திருக்கிறார் Deborah. அந்த பையன் என்னைக் குத்திவிட்டான் என்று கூறியபடி நிலைகுலைந்து சரிந்த Deborah, அங்கேயே இரத்தம் வெளியேறி உயிரிழந்துவிட்டார்.
அவரது உடலில், தலை, முகம், கழுத்து, நெஞ்சு, மார்புகள், தொடை, பாதம், கணுக்கால், கை என மொத்தம் 19 இடங்களில் கத்திக்குத்து விழுந்திருந்தது. கத்தியால் குத்திவிட்டு Deborahவுக்கு என்ன நேர்ந்தது, அவர் உயிருடன் இருக்கிறாரா, இறந்து விட்டாரா என்று கூட பார்க்காமல் மையத்திலிருந்து தப்பியோடியிருக்கிறார் Brandon.
பின்னர் இரத்தக்கறை படிந்த உடைகளுடன் ஓரிடத்தில் பதுங்கியிருந்த Brandonஐ பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பின், நேற்றுதான் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார் Brandon. 24ஆம் திகதி நீதிமன்றம் முன் அவர் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், அடுத்த மாதம் நீதிபதிகள் குழு ஒன்று விசாரணையை துவக்க உள்ளது.