"நீங்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது" முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து!
தமிழக முதல்வராக இன்று பதவியேற்றுள்ள தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றது. இதனையடுத்து, சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
அதைத்தொடர்ந்து முதலமைச்சராக மு.க.ஸ்டாலினை பதவி ஏற்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில், இன்று சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"முடித்தே தீர வேண்டிய’ பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க, சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ‘மக்களின் முதல்வராக’ பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
சுவாசிப்பதற்கு ‘உயிர் காற்று’கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிற இந்த பேரிடர் காலத்தில், நீங்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. தங்கள் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சியடையும் என்று நம்புகிறோம். தங்களுக்கும், ஆற்றலும் அனுபவமும் நிறைந்த தமிழக அமைச்சர் பெருமக்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள்.
தமிழகத்தின் உரிமையை மீட்க தமிழர்களின் ஒருமித்த குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும்" என்று கூறி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இன்று பதவி ஏற்க்கும் தமிழக முதல்வர் @mkstalin அவர்களுக்கும் அமைச்சர் பெருமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!! pic.twitter.com/AclBvTXu3F
— Suriya Sivakumar (@Suriya_offl) May 7, 2021
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள அமைச்சரவையில் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். ஸ்டாலின் பதவியேற்றதைத் தொடர்ந்து அமைச்சர்கள் அனைவரும் பதவி ஏற்றனர்.