யோகி ஆதித்யநாத் போல செயல்படுங்க.., பெண் அமைச்சரை எச்சரித்த பவன் கல்யாண்
யோகி ஆதித்யநாத் போல செயல்படுங்கள் என்று பெண் அமைச்சரை ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் எச்சரித்துள்ளார்.
பவன் கல்யாண் எச்சரிக்கை
ஆந்திர மாநில துணை முதலமைச்சர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், "ஆந்திர மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை மோசமடைந்து வருகிறது. இதற்கு பெண் அமைச்சர் வாங்கலப்புடி அனிதா பொறுப்பேற்க வேண்டும்.
இந்த நிலைமை சீராகவில்லை என்றால் உள்துறையை நான் எடுத்துக் கொள்வேன். உங்களது பணிகளை நன்றாக செய்யுங்கள். நான் உங்கள் துறையை எடுத்துக்கொண்டால் வேறு விதமாக இருக்கும். மேலும், உளவுத்துறை அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும்.
குற்றவாளிகள் தொடர்பாக யோகி ஆதித்யநாத் பின்பற்றும் கொள்கையை ஆந்திராவிலும் பின்பற்ற வேண்டும். யோகி ஆதித்யநாத் போல செயல்படுங்கள்" என்றார்.
தனது கூட்டணியில் உள்ள அமைச்சர் குறித்து பவன் கல்யாண் இவ்வாறு பேசுவது ஆந்திர அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த அமைச்சர் நாராயணா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |