கொரோனாவால் மோசமான பாதிப்புக்குள்ளான பகுதிகளில் பிரான்ஸ் எடுத்துள்ள புதிய நடவடிக்கை!
பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருவதால், சில முக்கிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மேலும் இரண்டு மணிநேரம் முன்வைப்பதாக பிரெஞ்சு அரசாங்கம் அறிவித்தது.
பிரான்சின் 101 டிபார்ட்மெண்ட்களில், பாதிக்கப்பட்டுள்ள 15 பகுதிகளுக்கு ஜனவரி 2-ஆம் திகதியிலிருந்து (சனிக்கிழமை) இரவு 8:00 மணிக்கு பதிலாக மாலை 6:00 மணியிலிருந்து ஊரடங்கு உத்தரவு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
சினிமா தியேட்டர்கள் மற்றும் இசை நிகழ்ச்சி அரங்குகள் மீண்டும் திறக்கப்படாது. அவை ஜனவரி 7-ஆம் திகதிக்குள் மூடப்படவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட பிரான்சின் அரசாங்க செய்தித் தொடர்பாளர் கேப்ரியல் அட்டால் "இந்த வைரஸ் பிரான்சில் தொடர்ந்து பரவி வருகிறது, சில பகுதிகளில் நிலைமை மேலும் மோசமடைந்துவிட்டால், நாங்கள் மேலும் தேவையான முடிவுகளை எடுப்போம்" என்றார்.
இதற்கிடையில், வடமேற்கு பிரான்சில் நேற்று 2,500 பேர் கொண்ட கும்பல் சட்டவிரோதமாக புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பிரான்சின் மற்ற பகுதிகள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்துள்ளனர். இதனால் தொற்று பரவும் அபாயம் மேலும் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.