ரஷ்யாவுடனான உறவுகளை முறித்துக்கொள்ள மறுத்த முன்னாள் ஜேர்மன் சேன்ஸலர்: அவரது மொத்த அலுவலக ஊழியர்களும் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
முன்னாள் ஜேர்மன் சேன்ஸலர் ஒருவர், ரஷ்யாவுடனான தனது உறவுகளை முறித்துக்கொள்ள மறுத்ததால், அவரது அலுவலக ஊழியர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளார்கள்.
முன்னாள் ஜேர்மன் சேன்ஸலரான Gerhard Schroeder, ரஷ்ய அதிபரான விளாடிமிர் புடினுக்கு நெருக்கமானவர் ஆவார். அவர், ரஷ்ய இயற்கை எரிவாயுவை ஜேர்மனிக்கு ஏற்றுமதி செய்யும் விடயத்திற்கு ஆதரவானவரும் கூட.
Schroeder, மூன்று ரஷ்ய எரிவாயு மற்றும் எரிவாயுக் குழாய் நிறுவனங்களில் பொறுப்புகள் வகிக்கிறார் என்கின்றன ஜேர்மன் ஊடகங்கள்.
உலகம் அறிந்ததுபோல், கடந்த வாரம் ரஷ்யா உக்ரைனுக்குள் ஊடுருவியது.
இந்நிலையில், Schroederஇன் வருவாயின் பெரும்பகுதி சட்டவிரோதமாக உக்ரைனுக்குள் ஊடுருவிய ஒரு நாட்டிலிருந்து வருவதாக அவரது விமர்சகர்கள் விமர்சனங்கள் முன்வைத்தார்கள்.
Schroederஇன் முதன்மை அலுவலரான Albrecht Funk என்பவர், தாங்கள் ரஷ்யாவுடனான உறவை முறித்துக்கொள்ளுமாறு Schroederக்கு ஆலோசனை அளித்தும், அவர் அதன்படி நடந்துகொள்ள மறுத்துவிட்டதாகவும், அதனால், தானும் தன் சக அலுவலர்களுமாக, மொத்தம் நான்கு பேரும் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
77 வயதாகும் Schroeder, 2005ஆம் ஆண்டு வரை ஜேர்மன் சேன்ஸலராக பதவி வகித்தவர் என்பதும், அவர் ஏஞ்சலா மெர்க்கலிடம் தோல்வியைத் தழுவியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.