புதிதாக புலம்பெயர்ந்துள்ளோருக்கு உதவும் வகையில் கனடா எடுக்கவிருக்கும் நடவடிக்கை: அமைச்சர் தகவல்
தற்காலிக வாழிட உரிமத்துடன் கனடாவுக்கு புதிதாக வந்துள்ளோர், நிரந்தர வாழிட உரிமம் பெறுவதை விரைவாக்கும் வகையிலான ஒரு திட்டத்தை உருவாக்க, கனடா அரசு தயாராகி வருவதாக, கனேடிய புலம்பெயர்தல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்காலிக வாழிட உரிமம் கொண்டோர் நிரந்தர வாழிட உரிம பெறுவதற்கான சிறந்த வழிமுறையை உருவாக்குவதற்கான திட்டம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் கனடா அரசு இறங்கியுள்ளதாக கனேடிய புலம்பெயர்தல் அமைச்சரான Sean Fraser தெரிவித்துள்ளார்.
இதற்கு முன், ’temporary resident to permanent resident pathway’ அல்லது TR to PR என்னும் ஒரு திட்டம் நடைமுறையில் இருந்தது. அதன் மூலம், 90,000 அத்தியாவசியப் பணியாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்கள் விரைவாக நிரந்தர வாழிட உரிமம் பெற முடிந்தது.
புதிதாக உருவாக்கப்படும் திட்டம், பழைய திட்டத்தைப்போல இருக்காது என்று கூறியுள்ள அமைச்சர் Fraser, அதை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளதாகவும், அது சர்வதேச மாணவர்களுக்கு மட்டுமன்றி, தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களுக்கும் பயனளிக்கத்தக்கதாக இருக்கும் வகையில், அதை தான் தீவிரமாக திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய, ரொரன்றோ மெட்ரோபாலிட்டன் பல்கலையில் உள்ள புலம்பெயர்தல் பிரச்சினைகள் குறித்து ஆராயும் அமைப்பு ஒன்றைச் சேர்ந்தவரான ரூபா பேனர்ஜி என்பவர் கூறும்போது, சிலருக்கு நிரந்தர வாழிடம் உரிமம் கொடுப்பதை தொடர்ந்து விரைவுபடுத்துதல் நல்ல கொள்கை என்று கூறினார்.
நாம் கோவிட் கட்டுப்பாடுகள் மற்றும் எல்லை மூடல்களை சந்தித்த நிலையில், ஏற்கனவே கனடாவுக்கு வந்துவிட்டிருப்பவர்களுக்கு நிரந்தர வாழிட உரிமம் அளிக்கும் வகையில் அவர்கள் மீது கவனம் செலுத்துவது இப்போதைக்கு அத்தியாவசியமான நடவடிக்கை என்கிறார் அவர்.
அத்துடன், ஏற்கனவே கனடாவுக்கு வந்துவிட்டவர்களுக்கு கனேடிய கல்வி மற்றும் கனேடிய பணி அனுபவமும் இருக்கும் என்பதால், இப்போது வெளிநாட்டிலிருந்து நேரடியாக கனடாவுக்கு வருபவர்களை விட, அவர்கள் நிரந்தர வாழிட உரிமம் பெற்றவர்களாகும்போது, அவர்கள் நாட்டுக்கு உண்மையாகவே பயனுள்ளவர்களாக இருப்பார்கள் என்பதிலும் சந்தேகமிலை என்கிறார் ரூபா.