பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ மீதான பாலியல் வழக்கில் அதிரடி திருப்பம்
பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ மீதான பாலியல் வழக்கில் அதிரடி திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ, தான் பருவம் அடைவதற்கு முன் தன்னுடன் மூன்று முறை பாலுறவு கொண்டதாக Virginia Roberts-Giuffre என்ற பெண் பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்தார்.
பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்தக் குற்றச்சாட்டு காரணமாக, இளவரசர் ஆண்ட்ரூவுக்கு அவரது குடும்பத்துக்குள்ளேயே பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது.
மகாராணியார் அவரை ராஜ குடும்ப பொறுப்புகளிலிருந்து விலகிக்கொள்ள கட்டளையிட, இளவரசர் சார்லசோ, ஆண்ட்ரூ வெளியே தலைகாட்டவே கூடாது என உத்தரவிட்டிருந்தார்.
Virginia Roberts ஒரு அமெரிக்க அவுஸ்திரேலிய பெண் ஆவார். ஏராளம் சிறுமிகளையும் இளம்பெண்களையும் சீரழித்து, பல செல்வந்தர்களுக்கு விருந்தாக்கிய அமெரிக்க கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தன்னை இளவரசர் ஆண்ட்ரூவுக்கு அறிமுகம் செய்ததாகவும், தனக்கு 17 வயதே இருக்கும்போது தன்னுடன் ஆண்ட்ரூ பாலுறவு கொண்டதாகவும் Virginia Roberts குற்றம் சாட்டியிருந்தார்.
ஜெஃப்ரி எப்ஸ்டீனின் கூட்டாளியாகிய கிஸ்லைன் மேக்ஸ்வெல் என்ற பெண்ணின் லண்டன் வீட்டில் இந்த சம்பவம் நடந்ததாக கூறிய Virginia Roberts, தனது இடுப்பில் இளவரசர் ஆண்ட்ரூ கைபோட்டவண்ணம் இருக்கும் ஒரு புகைப்படத்தை அதற்கு ஆதாரமாக முன்வைத்திருந்தார்.
ஒரு பக்கம் Virginia Roberts தன்னுடன் ஆண்ட்ரூ பாலுறவு கொண்டதற்கு ஆதாரமாக அந்த புகைப்படத்தை முன்வைக்க, மறுபக்கம் அந்த புகைப்படத்தைப் பயன்படுத்தி 160,000 டொலர்கள் பணமும் பார்த்துவிட்டார்.
ஆனால் தான் Virginia Robertsஐ சந்தித்ததேயில்லை என இளவரசர் ஆண்ட்ரூ தொடர்ந்து கூறிவந்த நிலையில், அவரது தோழியான Lady Victoria Hervey என்பவரும், அந்த புகைப்படத்திலிருப்பது அயர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் என்றும், அந்த படத்தில், பிறகு அந்த நபரின் தலைக்கு பதிலாக இளவரசர் ஆண்ட்ரூவின் தலை கிராபிக்ஸ் முறையில் இணைக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
அந்த புகைப்படம் வழக்கில் முக்கிய ஆதாரமாக கருதப்படும் நிலையில், அது உண்மையான புகைப்படமா அல்லது கிராபிக்ஸ் செய்யப்பட்டதா என்பதை அறிவதற்காக சட்டத்தரணிகள் புகைப்படக்கலை நிபுணர்களை ஏற்பாடு செய்துள்ளார்கள்.
இந்நிலையில், வழக்கில் ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தான் அந்த புகைப்படத்தைத் தவறவிட்டுவிட்டதாக Virginia Roberts தெரிவித்துள்ளார்.
வீடு மாற்றும்போது சில பெட்டிகள் எங்கோ தவறிவிட்டதாகவும், அவற்றில் இருந்த அந்த புகைப்படமும் தவறிவிட்டதாகவும் Virginia Roberts தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தான் Virginia Robertsஐ சந்தித்ததில்லை என இளவரசர் ஆண்ட்ரூ கூறிக்கொண்டிருக்கும் நிலையில், புகைப்படம் தவறிவிட்டது, வழக்கில் அவருக்கு சாதகமான சூழலை உருவாக்கலாம் என கருதப்படுகிறது.