சூரிச் பொலிஸார் மீது 17 வயது ஆர்வலர் பகீர் குற்றச்சாட்டு
சுவிட்சர்லாந்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தில், சூரிச் பொலிசாரின் நடவடிக்கையை 17 வயது ஆர்வலர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
சூரிச் பகுதியில் அக்டோபர் 4ம் திகதி இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுமார் 200 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்ட இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலருக்கே சூரிச் பொலிசாரால் அவர்களின் உரிமை மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்ட டிசினோவை சேர்ந்த 17 வயது Ariele என்பவரே தற்போது சூரிச் பொலிஸார் மீது பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தவர்.
சம்பவத்தின் போது நான்கு காவலர்கள் தம்மிடம் ஜேர்மன் மொழியில் அறிவுறுத்தல்களை வழங்கியதாகவும், ஆனால் மொழி புரியாமல் தாம் திணறுவதை சாதகமாக பயன்படுத்திய அவர்கள், தம்மை வலுக்கட்டாயமாக பொலிஸ் வாகனத்தில் கொண்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
தர்ணாவில் கைது செய்யப்பட்ட சுமார் 80 பேர்கள் அப்போது அந்த காவல் நிலையத்தில் ஒன்றாக இருந்ததாக Ariele தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஒவ்வொருவராக தங்கள் விரல் அடையாளங்களை பதிவு செய்ய பொலிசார் வலியுறுத்த, தாம் அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்ததாகவும், ஆனால் ஆத்திரம் கொண்ட பொலிசார் வலுக்கட்டாயமாக, தமது தலையை மேஜை மீது அழுத்தி, விரல் அடையாளங்களை பெற முயன்றனர் என்றார்.
இருப்பினும், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என Ariele தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இன்னொரு அறைக்கு தம்மை விசாரணைக்காக அழைத்து சென்ற பொலிசார் தமது உடைகளை களைய கட்டாயப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
ஆனால் அதற்கும் தாம் மறுப்பு தெரிவிக்க, அவர்கள் வலுக்கட்டாயமாக தமது உ:ள்ளாடைகள் உட்பட அனைத்தையும் உருவியதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து தர்ணா தொடர்பில் விசாரணை நடத்திய பொலிசார் தம்மை விடுவித்ததாக தெரிவித்துள்ளார்.
விசாரணை முடியும் மட்டும் நான்கரை மணி நேரம் அங்கே செலவிட நேர்ந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தவே, குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படும் என சூரிச் நகர காவல்துறை தெரிவித்துள்ளது.