கரூர் துயர சம்பவத்திற்கு யார் பொறுப்பு? மனம் திறந்த அஜித்குமார்
கரூர் துயர சம்பவம் குறித்து நடிகர் அஜித்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
கரூர் துயர சம்பவம்
கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சமீபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னையில் உள்ள தனியார் விடுதியில் வைத்து சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆறுதல் கூறினார்.
இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் கரூர் துயர சம்பவம் குறித்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
ஒரு நபரின் பொறுப்பு அல்ல
இதில் பேசிய அவர், "தமிழ்நாட்டில் நிறைய சம்பவங்கள் நடந்துள்ளது. கூட்ட நெரிசல் சம்பவம் நடந்துள்ளது. அது ஒரு நபரின் பொறுப்பு அல்ல. நம் அனைவரின் பொறுப்பு ஆகும்.
கூட்டம் கூட்டுவதை விரும்பும் போக்கை கைவிட வேண்டும். அதை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறேன். கிரிக்கெட் போட்டிகளிலும் தான் கூட்டம் வருகிறது.

ஆனால் திரையரங்குகளில் மட்டும் இது போன்ற பிரச்சினைகள் நடப்பது ஏன்? பிரபலங்களுக்கு மட்டும் இதுபோன்று நடப்பது ஏன்? இது திரையுலகை உலகத்திற்கு மோசமாக காட்டிவிடும்.
ஊடகங்களுக்கும் இதில் பங்குள்ளது. அவர்களும் முதல் நாள் முதல் காட்சியை ஊக்குவிக்கிறார்கள். FDFS கலாச்சாரம் முடிவுக்கு வர வேண்டும்.
திரையரங்கு உரிமையாளர்கள் பல லட்சங்கள் செலவு செய்து, தியேட்டரை புதுப்பிக்கிறார்கள். கொண்டாட்டம் என்ற பெயரில் உள்ளே பட்டாசுகள் வெடிப்பது, இருக்கைகளை உடைப்பது Once More கேட்டு திரையை கிழிப்பது இவை அனைத்தும் முடிவுக்கு வரவேண்டும்.
ரசிகர்களின் அன்புக்காகவே நாங்கள் உழைக்கிறோம். அதற்காக, உயிரைப் பணயம் வைத்து அன்பு காட்ட வேண்டாம். அன்பைக் காட்டுவதற்கு வேறு வழிகள் உள்ளன" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |