பிரபல நடிகர் அர்ஜுன் மீது நடிகை ஸ்ருதி கொடுத்த 'மீ டூ' புகார்! புயலை கிளப்பிய வழக்கில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
நடிகர் அர்ஜூன் மீது நடிகை ஸ்ருதி ஹரிகரன் தொடுத்த பாலியல் வழக்கில் ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அர்ஜுனை நீதிமன்றம் வழக்கில் இருந்து விடுவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபலமாக நடிகராக உள்ளவர் அர்ஜூன். கர்நாடகாவை சேர்ந்த இவர், தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடா ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து உள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு கன்னடத்தில் படமாக்கப்பட்ட ‘விஸ்மையா’ திரைப்படத்தில் நடித்த கன்னட நடிகை ஸ்ருதி ஹரிகரனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீ டூ வாயிலாக புகார் அளித்தார்.
இதுகுறித்து பெங்களூரு பொலிசிலும் புகார் அளித்த நிலையில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த விவகாரம் திரையுலகினர் ம்ற்றும் ரசிகர்கள் மத்தியில் புயலை கிளப்பியது.
நடிகையிடம் அர்ஜூன் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர், அர்ஜூனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அவர் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறிவிட்டார்.
இருப்பினும் நடிகை ஸ்ருதி ஹரிகரன் அந்த வழக்கில் இருந்து பின்வாங்கவில்லை. பொலிசார் நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டுமென்று விடாப்பிடியாக இருந்தார். இதுதொடர்பாக வழக்கு கர்நாடக மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
சுமார் 3 ஆண்டுகள் நடந்து வந்த வழக்கில் பொலிசார் சார்பில் குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்யவேண்டியிருந்தது. ஆனால் முறையான ஆதாரங்கள், சாட்சிகள் அர்ஜூனுக்கு எதிராக இல்லை என்று கூறப்படுகிறது.
மேலும் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், சக நடிகர்கள், அர்ஜூனுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளையும் முன் வைக்கவில்லை. இதையடுத்து நேற்று நீதிமன்றத்தில் எந்தவிதமான சாட்சிகளும் இல்லையென்று பொலிசார் ஆவணங்களை தாக்கல் செய்தனர். அதை ஏற்று கொண்ட நீதிபதி போதிய, ஆதாரங்கள் இல்லாததால் நடிகர் அர்ஜூனை இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதாக உத்தரவிட்டுள்ளார்.